சட்டசபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கீடு


சட்டசபையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கீடு
x

3-வது இடத்தில் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை கூட்டம் நேற்று (டிச.9) காலை கூடியது.

முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. கோதண்டம், சுப்புராயர், முகமது கனி, தொழிலதிபர் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக கடந்த செப்டம்பர் மாதம் 29-ந் தேதி உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றார். மேலும் 4 அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் சட்டசபையில் அமைச்சர்கள் வரிசை மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

அமைச்சராக இருந்தபோது 10-வது இடத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்துள்ளார். 3-வது இடத்தில் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி, நாசர் ஆகியோர் ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது எந்த இடத்தில் இருந்தார்களோ, அதே இடம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆர்.ராஜேந்திரனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின்புறம் உள்ள இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story