திருமாவளவனின் இரட்டை வேடம்: பாஜக மூத்த தலைவர் தமிழிசை தாக்கு
நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் திருமாவளவன் இருக்கிறாரா?என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான 992 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவை சாடும் வகையில் பேசினார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேச்சை சுட்டிக்காட்டி திருமாவளவனை விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளதாவது:- அனைவருக்குமானவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனிவின் மனசாட்சி அங்கே இருக்கிறது என்று அவர் கட்சியில் இருக்கும் துணைப் பொதுச் செயலாளரே கூறுகிறார்! இன்றைய அரசியல் நாடகத்தில் திருமாவளவனின் இரட்டை வேடம். ஒரு வேடத்தின் மனசாட்சி அங்கே! மேடையில் ஒரு வேடம்! இங்கே மன்னர் ஆட்சி நடத்தும் திமுகவின் அரசாட்சியோடு... ஒரு வேடம்! திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு வேடம்!திமுக கூட்டணிக்கு ஆதரவாக... நேராக செல்லாதது நேர்மையான முடிவா? அல்லது நேரத்திற்கு ஏற்ற முடிவு செய்து கொள்ளலாம்.. என்ற முன்னெச்சரிக்கை? முடிவா.. அல்லது எச்சரிக்கை செய்யும் முன்னோட்டமா????" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.