முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில் முதல்-அமைச்சரை, திருமாவளவன் நேரில் சந்தித்தார்.
சென்னை,
வி.சி.க. துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. குறித்து பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் ஆதவ் அர்ஜுனா பேசியது தவறுதான். அது அவரது தனிப்பட்ட கருத்து.. கட்சியின் கருத்து அல்ல என்றும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திருமாவளவன் விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது. இது குறித்து நேற்று முன் தினம் கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கி உள்ளது இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீரமானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தி.மு.க.வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார்.
அப்போது வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதல்-அமைச்சரிடம் திருமாவளவன் அளித்தார். முன்னதாக வி.சி.க. சார்பில் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும், எம்.பி.க்களின் 2 மாத சம்பளமும் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.