தொடர் கனமழை: சென்னை முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு


தொடர் கனமழை: சென்னை முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

முத்தியால்பேட்டையில் ஏடிஎம் அருகே இரும்புக் கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் பெரும்பாலான சாலைகள், தெருக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. காற்று பலமாக வீசுவதால் பல பகுதிகளில் அதிகாலையிலேயே மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் வீடுகள் இருளில் மூழ்கின.

ஏராளமான மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றினாலும் கொட்டிய மழைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பல இடங்களில் வெளியேற்றப்படும் தண்ணீரை சாலைகளில் விட்டதால் மீண்டும் பெருக்கெடுத்தது. பரபரப்பாக காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை முத்தியால்பேட்டையில் ஏடிஎம் அருகே இரும்புக் கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்த சந்தன் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story