புதிதாக ஒரு கூட்டணியில் வி.சி.க. சேர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை - திருமாவளவன்


புதிதாக ஒரு கூட்டணியில் வி.சி.க. சேர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை - திருமாவளவன்
x

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை,

விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் என திருமாவளவன் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தை திருமாவளவன் நீண்ட அறிக்கையின் மூலம் விளக்கியிருந்தார்.

இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தினால் திருமாவளவன் பங்கேற்கவில்லை என கூறினார். ஆதவ் அர்ஜுனா பேசும்போது, "தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதல்-அமைச்சர் இங்கு உருவாகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும்" என்று கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

புதிதாக அமையும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது. புதிய கூட்டணியில் வி.சி.க. இடம்பெற வேண்டிய தேவையும் எழவில்லை. ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலனுக்கு எதிராக இருப்பதாக நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் யார் தவறு செய்தாலும் முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிவைக்கப்படுகிறது என்பதைவிட தி.மு.க. கூட்டணி குறிவைக்கப்படுகிறது. இது தி.மு.க. கூட்டணியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கான சதியாக இருக்கும். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கமாட்டேன் என்பது சுயமாக எடுத்த முடிவு. தி.மு.க. அழுத்தம் தருகிறது எனில் ஆரம்பத்திலேயே விழாவில் பங்கேற்கமாட்டேன் என்று சொல்லி இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story