பெஞ்சல் புயல்: சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண மையங்கள்
கனமழை காரணமாக சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை,
வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனை கொண்டு வெள்ள நீர் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
134 இடங்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, 8 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 126 இடங்களில் துரிதமாக மழை நீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை எந்திரங்கள் 9 , ஹைட்ராலிக் ஏணி 2 , மர அறுவை எந்திரங்கள் 262 , டெலஸ்கோபிக் மர அறுவை எந்திரங்கள் 216 என மொத்தம் 489 எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இன்று காலை 9 மணி அளவில், மழையின் காரணமாக 10 மரங்கள் விழுந்துள்ளன. இவற்றில் 5 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டது. மீதமுள்ள மரங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன.
மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை வெள்ள களப்பணிகளில் 18,500 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.