

சென்னை,
ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நாளை (செவ்வாய்கிழமை) செல்லும் முதல்-அமைச்சர் விஜய்,.அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுகிறார்.
தமிழக முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக நாளை (செவ்வாய்கிழமை) விஜயவாடா செல்கிறார்.
இதற்காக நாளை மதியம் 2.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்படும் முதல்-அமைச்சர் விஜய், மதியம் 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் புறப்படும் அவர் மாலை 4 மணிக்கு விஜயவாடா விமான நிலையம் வந்தடைகிறார். தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக மட்டும் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து 30.5 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு காரில் செல்கிறார். மாலை 4.55 மணிக்கு கோவிலுக்கு செல்லும் அவர், மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்கிறார். பின்னர், அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு காரில் புறப்படும் அவர் மாலை 6 மணிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இல்லத்தை அடைகிறார். ஒரு மணி நேரம் அங்கிருக்கும் முதல்-அமைச்சர் விஜய், கோதாவரி - காவிரி ஆறு இணைப்புத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நீரை திறந்துவிடுவது குறித்து அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் எம். வடநேரே உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.
இரவு 7.10 மணிக்கு சந்திரபாபு நாயுடு இல்லத்தில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் விஜய், உத்சவ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இரவு 8 மணி வரை அங்கிருக்கும் அவர் பின்னர், காரில் புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு விஜயவாடா விமான நிலையத்தை வந்தடைகிறார். இரவு 9 மணிக்கு அங்கிருந்து தனி விமானத்தில் புறப்படும் அவர் இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு நீலாங்கரை இல்லத்தை அவர் அடைகிறார்.