கிராம மக்கள் உண்ணாவிரதம்
கோவிலுக்கு செல்ல சாலை அமைத்துதரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நெட்டப்பாக்கம்
கோவிலுக்கு செல்ல சாலை அமைத்துதரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கோவில் புனரமைப்பு
நெட்டப்பாக்கம் அருகே கரியமாணிக்கம் புதுக்காலனியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு தலைமையில் பூமி பூஜை நடந்தது. தற்போது பழைய கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்டுவதற்கான ஆயத்த பணி நடந்து வந்தது. ஆனால் புதிய கோவில் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் பணியில் இடையூறு ஏற்பட்டது.
உண்ணாவிரதம்
இந்த நிலையில் கோவில் கட்டுவதற்கு சாலை வசதி இல்லாததை கண்டித்து கிராம மக்கள் கரியமாணிக்கம்-புதுச்சேரி செல்லும் சாலையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பிரச்சினையில் தொகுதி எம்.எல்.ஏ. தலையிட்டு கோவிலுக்கு செல்ல சாலையை உருவாக்கி தரும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை காரணமாக உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.