ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
அரியாங்குப்பம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ரவுடிகள் பட்டியல்
புதுச்சேரியில் ரவுடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் ரவுடிகளின் ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது. ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக அவ்வப்போது ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 40-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களது வீடுகளில் போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், பழனிச்சாமி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை நேரத்தில் அரியாங்குப்பம், பி.சி.பி. நகர், அம்பேத்கர் நகர், சுப்பையா நகர், புதுக்குளம், மணவெளி, ஓடைவெளி, சின்ன வீராம்பட்டினம், சண்முகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை செய்தனர்.
போலீசார் சோதனை
ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? ஊருக்குள் வர தடை விதிக்கப்பட்ட ரவுடிகள் யாரும் வீடுகளில் பதுங்கி உள்ளனரா? என்று சோதனை நடத்தப்பட்டது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட தொடர் பண்டிகை வருவதால் ரவுடிகள் ஏதேனும் அசம்பாவித சம்பங்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அதிகாலை நேரத்தில் போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.