பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை


பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை
x

போராட்டம் நடத்திய நேரு எம்.எல்.ஏ.விடம் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேரு எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார்.

புதுச்சேரி

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேரு எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார்.

முற்றுகை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை உருளையன்பேட்டை தொகுதியில் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட்டை நவீனப்படுத்துதல், வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை (கட்டிடம் மற்றும் சாலைகள்) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ஏழுமலை ஆகியோர் அங்கு விரைந்து வந்து நேரு எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதிகாரிகள் உறுதி

அப்போது நடைபெற உள்ள பணிகள் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் எடுத்துக் கூறினர். பணிகளை விரைவாக தொடங்கி, முடிப்பதாகவும் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டம் தொடர்பாக நேரு எம்.எல்.ஏ. நிருபர் களிடம் கூறியதாவது:-

நடவடிக்கை இல்லை

மறைமலையடிகள் சாலையில் இருபுறமும் உள்ள வாய்க்கால்கள், காந்தி வீதி, திருவள்ளுவர் சாலையில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப் படாமல் உள்ளன. இதனால் சிறுமழை பெய்தாலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனை தடுக்க உரிய வாய்க்கால் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

உருளையன்பேட்டை தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 24 ஆயிரம்தான். ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் என சராசரியாக 3 லட்சம் பேர் வந்து செல்லும் பகுதியாக இந்த தொகுதி உள்ளது. இங்குதான் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட் போன்றவையும் உள்ளன. இவைகளை நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிடப்பில் போட்டுள்ளனர்

பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பல்வேறு பணிகள் நடை பெறும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. நகரின் முக்கிய வீதிகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவைகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சரிசெய்து இருக்கலாம். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.

இவ்வாறு நேரு எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story