ராகுல்காந்தி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது
ராகுல்காந்தி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாய படுகொலை நடந்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
காரைக்கால்
ராகுல்காந்தி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாய படுகொலை நடந்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தி திணிப்பு
புதுச்சேரிக்கு வருகை தரும் ஜனாதிபதி, மத்திய அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்கிறார். மாநில அரசு எந்தவித மக்கள் நல விழாவையும், ஜனாதிபதியை வைத்து நடத்தவில்லை. அப்படி நடத்தி இருந்தால் நமது மக்களுக்கும், புதுச்சேரிக்கும் பெருமை கிடைத்திருக்கும். ஆனால், மாநில அரசு அவ்வாறு செய்ய தவறிவிட்டது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நமது நாட்டின் ஆட்சிமொழியான இந்தியை யாரும் எதிர்க்க கூடாது என பேசியுள்ளார். இதனை அமித்ஷா திரும்பபெற வேண்டும். இல்லாவிட்டால், புதுச்சேரியில் போராட்டம் வெடிக்கும். நாங்கள் ஒருகாலமும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மாநில அந்தஸ்து
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து குறித்து, சட்டமன்றத்தில், மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஜூலை மாதம்தான் தனது கைக்கு கிடைத்தது என கவர்னர் கூறுவது ஏற்புடையதல்ல. அப்படியென்றால், அந்த தீர்மான நகல் கடந்த 5 மாதமாக எங்கே இருந்தது.
தானும், ரங்கசாமியும் அண்ணன், தங்கை என நாடகமாடும் கவர்னர், தனிமாநில அந்தஸ்து விசயத்தில் தப்பித்துகொள்ள நாடகமாடுகிறாரோ என தோன்றுகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறி ஒரு வருடத்திற்கு மேலாகியும், அதனை செய்யவில்லை. இதனால் விவசாயிகள் மற்ற வங்கியில் கூட கடன்பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஜனநாயக படுகொலை
பா.ஜ.க.வும், என்.ஆர். காங்கிரசும் ஆட்சிக்கு வந்தால் புதுவையில் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். தற்போது சாராயமும், மதுவும்தான் தாராளமாக ஓடுகிறது.
ராகுல்காந்தி விவகாரத்தில், குஜராத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய 24 மணி நேரத்தில், நாடாளுமன்ற சபாநாயகர், ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்தார். அவர் வசித்த வீட்டை காலிசெய்ய செய்தார். ஆனால், ராகுல்காந்தியின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, 48 மணி நேரமாகியும், பதவியை திரும்ப வழங்க முன்வரவில்லை. இது நாடாளுமன்றத்தின் ஜனநாயக படுகொலை. ராகுல்காந்தியை நாடாளுமன்றத்தில் நுழையவிடக்கூடாது என்று திட்டமிட்டு செய்யப்படும் சதியாகதான் நான் கருதுகிறேன்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார். பேட்டியின்போது, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன், இளைஞர் அணி தலைவர் ரஞ்சித் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.