சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள்


சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள்
x

திருநள்ளாறில் சாலையோரத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால்

திருநள்ளாறில் சாலையோரத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

மலைபோல் குவிந்த குப்பை

காரைக்கால் நகர் பகுதியில் வீடு, வீடாக சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகளை, பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாத இடத்தில் சேகரித்து மறுசுழற்சி மூலம் உரமாக தயாரிக்கப்படுகிறது.

ஆனால் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட செல்லூர்-கருக்கன்குடி செல்லும் பிரதான சாலையோரத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த குப்பைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் அப்புறப்படுத்தாமல், அவ்வப்போது தீவைத்து எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, சுற்றுச்சூழல் மாசடைகிறது. மாடு, நாய், பன்றிகள் குப்பைகளை கிளறிச்செல்வதால் குப்பைகள் சாலையின் அனைத்து பகுதிக்கும் சிதறி துர்நாற்றம் வீசுகிறது.

போராட்டம் நடத்த முடிவு

இந்த பகுதியில் ஏராளமான கிராமங்கள், விவசாய நிலங்கள் இருப்பதால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். அந்த வழியாக செல்பவர்கள் புகை மூட்டத்தால் திணறி வருகின்றனர். இந்த குப்பைகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே குப்பைகளால் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் நோய் பரவும் முன் அதனை அகற்ற திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் குப்பைகளை அள்ளி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கொட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story