கார் மோதி தொழிலாளி பலி
பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்துபோனார்.
பாகூர்
விழுப்புரம் மாவட்டம் குமளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 34), கூலித்தொழிலாளி. இவர் நேற்று கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்றுவிட்டு, பாகூரை அடுத்த இருளன்சந்தை மதுரா வழியாக வீடு திரும்பினார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார், திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலைதடுமாறிய கீழே விழுந்த பழனிசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.