ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவையில் தீபாவளி உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி
அமைப்புசாரா சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தீபாவளி உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும், அமைப்புசாரா சங்கத்தை வாரியமாக மாற்றி நிதி ஒதுக்கீடு செய்து வாரியம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், ஆட்டோவுக்கு தகுதி சான்றிதழ் வாங்க நாளொன்றுக்கு அபராதமாக விதிக்கப்படும் ரூ.50-ஐ ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், மாநில தலைவர் சேகர், பொருளாளர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிசேகம், தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஆட்டோ சங்க நிர்வாகிகளான துணைத்தலைவர்கள் பாளையத்தான், ரவிச்சந்திரன், சிவசுப்ரமணியன், வாசு, ஜீவா, முருகன், செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.