தலைமை ஆசிரியர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை


தலைமை ஆசிரியர் வீட்டில் 45 பவுன் நகைகள் கொள்ளை
x

திருட்டு நடந்த தலைமை ஆசிரியர் வீட்டை படத்தில் காணலாம்.

பெரிய காலாப்பட்டில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காலாப்பட்டு

பெரிய காலாப்பட்டில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைமை ஆசிரியர்

புதுவையை அடுத்த பெரியகாலாப்பட்டு பள்ளத் தெருவை சேர்ந்தவர் பெனிடிக் பிரான்சிஸ் (வயது 58). இவரது மனைவி விமலா ஜெயசீலி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் படிப்பு சம்பந்தமாக பெரம்பலூரில் தங்கியுள்ளார்.

பெனிடிக் பிரான்சிஸ் மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், விமலா ஜெயசீலி கீழ்புத்துப்பட்டை அடுத்த செய்யாங்குப்பம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

45 பவுன் நகைகள் கொள்ளை

கோடை விடுமுறைக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம்போல் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் வைத்திருந்த ஆரம், நெக்லஸ், வளையல், ஜிமிக்கி, மோதிரம், கம்மல் என 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தடயங்கள் சேகரிப்பு

இந்த கொள்ளை குறித்து காலாப்பட்டு போலீசில் பெனிடிக் பிரான்சிஸ் புகார் செய்தார். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story