போதை மறுவாழ்வு மையத்தில் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு
போதை மறுவாழ்வு மையத்தில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கோட்டுச்சேரி
போதை மறுவாழ்வு மையத்தில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்ததையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆட்டோ டிரைவர்
காரைக்கால் அடுத்த பிள்ளைத்தெரு வாசல் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ராஜன் (வயது 53). ஆட்டோ டிரைவர். மது போதைக்கு அடிமையானவர். இதனையடுத்து, 2 வருடத்திற்கு முன்பு காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள விடியல் போதை மறுவாழ்வு மையத்தில் குடி பழக்கத்தை மறக்க சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் மனம் திருந்திய ஜோசப் ராஜன் குடியை மறந்து இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மீண்டும் குடி பழக்கத்திற்கு ஆளான அவர், கடந்த 6 தேதி காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் இருக்கும் ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தானே சென்று சேர்ந்துள்ளார். இந்த நிலையில் அதிலிருந்து அவரைப் பற்றியான தகவல்கள், அவரது உறவினர்களுக்கு காப்பகத்தினர் தெரியப்படுத்ததில்லை என்று கூறப்படுகிறது.
மர்ம சாவு
இந்நிலையில் இன்று காலை ஜோசப்ராஜன் காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி யுவான், மகன் அந்தோணிராஜிக்கு காப்பகத்திலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உறவினர்களுடன் சென்று பார்க்கும் போது ஜோசப்ராஜன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்துள்ளது.
அவரது உடலில் சந்தேகப்படும்படியான காயங்கள் இருந்ததாகவும், இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின் பால் மற்றும் போலீசார் சாலை மறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆட்டோ டிரைவர் மர்மசாவு குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.