கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூலகுளம்
கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா புழக்கம்
புதுச்சேரி நகரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் லாம்பார்ட் சரவணன் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களை 'குறி' வைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்ற விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த குணசீலன் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தோப்பில் விற்பனை
புதுச்சேரி குருமாம்பேட் கே.வி.கே.பண்ணைக்கு எதிரே கஞ்சா விற்றதாக வில்லியனூரை சேர்ந்த வசந்தகுமார் ( 19), வேலூர் வாலாஜாபேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபிநாத் (26) ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணை நடத்தியதில், வசந்தகுமாரின் அண்ணன் மேகநாதன் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது வீட்டில் வைத்து இருந்த கஞ்சாவை அவரது தம்பி வசந்தகுமார் எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதன்மூலம் அதிக வருமானம் கிடைத்தது அடுத்து வேலூரை சேர்ந்த கோபிநாத்திடம் கஞ்சா வாங்கி வந்து புதுவையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
மற்றொருவர் கைது
இதேபோல் தட்டாஞ்சாவடி பிப்டிக் எஸ்டேட் அருகே கஞ்சா விற்ற புதுச்சேரி தர்மாபுரியைச் சேர்ந்த மகாவீர் என்ற பிரசன்னாவை (22) கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 550 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.