ஒரே மாதத்தில் 222 பேருக்கு டெங்கு பாதிப்பு


ஒரே மாதத்தில் 222 பேருக்கு டெங்கு பாதிப்பு
x

புதுவையில் கடந்த மாதம் 222 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி

புதுவையில் கடந்த மாதம் 222 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

புதுவையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 2 பெண்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதை தொடர்ந்து மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு காரணமாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு அமைக்கப்பட்டது. அங்கு தற்போது 9 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 1,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 142 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 8 முதல் 10 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை எச்சரிக்கை

இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

புதுவையில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. பருவமழை காலம் என்பதால் இந்த மாதமும், அடுத்த மாதமும் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன், எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story