11 மீனவ கிராம மக்கள் காலவரையற்ற போராட்டம்


11 மீனவ கிராம மக்கள் காலவரையற்ற போராட்டம்
x

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி 11 மீனவ கிராம மக்கள் வருகிற 18-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

காரைக்கால்

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி 11 மீனவ கிராம மக்கள் வருகிற 18-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

மீன்பிடி துறைமுகம்

காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மக்களின் நலன்கருதி கடந்த 2009-ம் ஆண்டு காரைக்கால் மற்றும் அரசலாறு இணையும் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் குறைந்தளவு படகுகள் மட்டுமே இருந்ததால் சுமார் 250 படகுகள் நிற்கும் அளவுக்கு துறைமுகம் கட்டப்பட்டது. தற்போது மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை, தமிழகத்திலிருந்து வந்து செல்லும் படகுகளையும் சேர்த்து இரு மடங்காக அதிகரித்து விட்டது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை நிறுத்த போதுமான இடம் இல்லை.

இதையடுத்து மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.72 கோடி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிதியை பயன்படுத்தி துறைமுகத்தை விரிவுப்படுத்தவும், முகத்துவாரத்தை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காலவரையற்ற போராட்டம்

இந்தநிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில் மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். துறைமுக முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும். மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்தி வழங்கவேண்டும். மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் வருகிற 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


Next Story