செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு


செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 26 Sep 2024 5:10 AM GMT (Updated: 26 Sep 2024 6:34 AM GMT)

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்கள்.இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் என்.ஆர்.இளங்கோ நிருபர்களிடம் கூறும்போது, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்திற்கு 2 நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். 25 லட்சம் ரூபாய்க்கு இருவர் உத்திரவாதம் வழங்க வேண்டும். சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக ஏதேனும் தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அமைச்சராக பொறுப்பேற்க எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று என்.ஆர். இளங்கோ கூறினார். செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் திமுக நிர்வாகிகள் சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story