ராஜஸ்தான்: கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை


ராஜஸ்தான்: கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Nov 2024 2:59 PM IST (Updated: 23 Nov 2024 2:59 PM IST)
t-max-icont-min-icon

கோட்டா நகரில் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் அன்னுபூர் பகுதியைச் சேர்ந்த 18 மாணவர் விவேக் குமார், கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்தார். கோட்டாவில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்து அவர் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் விடுதியின் 6-வது மாடியில் இருந்து விவேக் குமார் கீழே குதித்துள்ளார்.

இதையடுத்து படுகாயமடைந்த விவேக் குமாரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவேக் குமார் உயிரிந்தார். இது குறித்து தகவலறிந்து போலீசார் விவேக் தங்கியிருந்த விடுதி அறைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டாவில் நடப்பாண்டில் அரங்கேறியுள்ள 16-அது தற்கொலை சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு கோட்டா நகரில் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் தரக்கூடாது, விடுதிகளில் உள்ள பால்கனிகளில் பாதுகாப்பு வலைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை ராஜஸ்தான் மாநில அரசு வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட விடுதியில் பால்கனியில் இருந்த பாதுகாப்பு வலை சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story