பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவை உயர்த்த முடிவு


பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவை உயர்த்த முடிவு
x

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக உயர்த்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம்,

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. மறுநாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது.

நடை திறக்கப்பட்டு 7 நாட்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டில் இந்த காலக்கட்டத்தில் சாமி தரிசனம் செய்தவர்களை விட 1.75 லட்சம் பேர் அதிகம். இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்கள், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி தரிசன முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை தினசரி 80 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக கேரள ஐகோர்ட்டு அனுமதிக்காக காத்து இருக்கிறது. ஐகோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாக உயர்த்தப்படும் என தேவஸ்தானம் சார்பில் கூறப்படுகிறது.

சபரிமலையில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மரக்கூட்டம் முதல் வலிய நடை பந்தல் வரை பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 18-ம் படி ஏறி அய்யப்பனை தரிசனம் செய்தனர்.


Next Story