தீபத் திருவிழா நிறைவு.. மகா தீபம் ஏற்றப்பட்ட மலையில் பிராயச்சித்த பூஜை

மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
Published on

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடந்த 3-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வருவதால் தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயசித்த பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை இன்று நடந்தது.

இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com