மழைக்கால காலணி பராமரிப்பு


மழைக்கால காலணி பராமரிப்பு
x
தினத்தந்தி 31 July 2022 7:00 AM IST (Updated: 31 July 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தில், பாதங்களுக்கு சரியான அளவில் பொருந்தும் வகையில் காலணிகளை வாங்க வேண்டும். ஏனெனில் சாக்கடை நீர், மழைநீர் போன்றவை பாதங்களில் படிந்து கிருமித் தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கோடை வெயில் முடிந்து, பருவ மழை ஆரம்பித்திருக்கிறது. வெயில் காலத்தைப் போலவே, மழைக்காலத்திலும் சரும பராமரிப்பு, சரியான உடைகளை தேர்ந்தெடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்.

காலணிகள் தேர்ந்தெடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

 மழைக்காலத்தில் காலணிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். ஈரமான காலணிகளை அப்படியே அணியக் கூடாது. வெளியில் போய் வந்த பிறகு காலணிகளுக்குள் இருக்கும் நீரை வடிய வைத்து, உலர வைக்க வேண்டும். வாய்ப்பில்லாதவர்கள் காலணிகளை உலர வைக்க ஹேர் டிரையரை உபயோகிக்கலாம்.

 ஈரப்பதத்தை உலர வைக்கத் தவறினால் பாதத்திலும், விரல்களின் இடுக்குகளிலும் பூஞ்சைத் தொற்றுகள், சேற்றுப்புண் பாதிப்புகள் வரக்கூடும்.

 ஈரமான காலணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க சிலிக்கா ஜெல், கற்பூரம், நாப்தலின் உருண்டைகள் போன்றவற்றை போட்டு வைக்கலாம். இவை ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமில்லாமல், காலணிகளில் இருந்து துர்நாற்றத்தை நீக்கவும் வழி செய்யும்.

 மழைக்காலத்தில், பாதங்களுக்கு சரியான அளவில் பொருந்தும் வகையில் காலணிகளை வாங்க வேண்டும். ஏனெனில் சாக்கடை நீர், மழைநீர் போன்றவை பாதங்களில் படிந்து கிருமித் தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க தண்ணீர் புகாத, வாட்டர் புரூப் வகை காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்மூலம் நோய்த்தொற்று, கால்களில் வெடிப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.

 மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இவை எதிர்பாராமல் மழை நீரில் மாட்டிக் கொண்டால், நடக்கும்போது சிரமத்தை ஏற்படுத்தும்.

 ஷூ உபயோகிப்பவர்கள், மழை நீர் புகாத ஷூக்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இல்லையெனில் ஷூவுக்குள் தண்ணீர் புகாத வண்ணம் பிளாஸ்டிக் கவர்களை வாங்கி அணிந்து கொள்ளலாம்.

 ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 'பிளிப் பிளாப்' வகை காலணிகள், மழைக்காலத்தில் அணிவதற்கு ஏற்றவை. இவை தண்ணீரை உறிஞ்சாமல் கால்களை உலர்வாக வைக்கும்.

 ரப்பர்-சோல்ட் செருப்புகள், மழைக்கால சாலைகளில் நடக்கும்போது நல்ல பிடிமானத்தைக் கொடுக்கும். பாசி, சகதி போன்றவை வழுக்கி விடாமல் தடுக்கும்.

 பட்டையுடன் கூடிய காலணிகள் மழைக்காலத்தில் அணிவதற்கு பொருத்தமானவை. ஈரம்படும்போது கால்களின் பிடியில் இருந்து வழுக்காமல் இருப்பதற்கு இவை உதவும்.


Next Story