அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி... ... #லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
Daily Thanthi 2022-06-22 03:46:21.0
t-max-icont-min-icon


அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கிறது.

இந்தநிலையில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு 23-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக கூறிவருகிறார்கள். அதேவேளை சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறது.

பொதுக்குழுவை புறக்கணிக்க முடிவு

இதனால் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதேவேளை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவரது தம்பி ஓ.ராஜா நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். மேலும் அவரது ஆதரவாளர்களும் நேற்று இரவு நீண்டநேரம் ஆலோசனையில் பங்கேற்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் காத்திருக்கும் அவரது ஆதரவாளர்களும், ‘ஓ.பன்னீர்செல்வம் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறாரோ, அதனை பின்பற்ற தயார்’ என்று கூறி வருகிறார்கள். ‘பொதுக்குழு கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தால் நாங்களும் புறக்கணிப்போம். பிறகு அவரது முடிவை ஏற்போம்’ என்று கூறி வருகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாக நேற்று அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ‘எம்.ஜி.ஆர். வகுத்த சட்டவிதிகளின்படி தொண்டர்களே கட்சி தலைமையை தேர்வு செய்யவேண்டும். இதனை தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற நினைக்கும் தீயசக்திகளுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் உரிமையை பறிக்கும் பொதுக்குழுவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் படையெடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்சி விதிகள் குறிப்பிட்டுள்ளதோடு, அந்த போஸ்டரின் நிறைவில் எம்.ஜி.ஆரின் கையெழுத்தும் இருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story