உக்ரைனில் குழந்தைகளின் கல்வியை ரஷியாவால் தடை செய்ய முடியாது; உக்ரைன் அதிபரின் மனைவி
கீவ்,
உக்ரைன் குழந்தைகளின் கல்வியை ரஷியாவால் ஒருபோதும் தடை செய்ய முடியாது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா வலியுறுத்தி கூறினார்.
‘ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனிய மொழி பாடங்களை எவ்வளவு வேண்டுமானாலும் தடை செய்யலாம், எங்கள் ஆசிரியர்களை பயமுறுத்தலாம். ஆனால் அவர்கள் உக்ரேனிய கல்வியை ஒருபோதும் தடை செய்ய முடியாது’ என்று டெலிகிராமில் தெரிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு பதிலாக, இடிபாடுகள் மட்டுமே எஞ்சி இருப்பதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
செர்னிஹிவ் பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு ஆல்பம் ஒன்றில் அங்குள்ள குழந்தைகள், தங்கள் சொந்த ஊரில் உடைந்த வீடுகளின் பின்னணியில் போஸ் கொடுப்பதைக் காண முடிந்தது. பள்ளி ஆண்டு முடிவடைவதை, ஒரு குழந்தை எப்படி நினைவில் கொள்ளக்கூடாதோ அவ்வாறு இது அமைந்துள்ளது வேதனைக்குரிய விஷயம். போர் நடந்தாலும் வாழ்க்கை தொடரும்.உக்ரேனிய குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி வழங்க உக்ரேனிய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.