கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள்
22-04-2023 முதல் 01-05-2024 வரை
(உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: பா, பி, பு, பூ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)
எட்டாமிடத்தில் குரு பகவான், எதிலும் கவனம் மிகத்தேவை!
பிறர் மனம் புண்படாத விதத்தில் பேசும் கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 22.4.2023 முதல் 8-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் அவ்வளவு நல்லதல்ல. இருப்பினும் குரு சுபகிரகம் என்பதால் அதன் பார்வை பலத்தால் நன்மைகளை வழங்குவார். இக்காலத்தில் ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் அதிகரிக்கும். இடமாற்றங்கள், எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். துன்பங்களிலிருந்து விடுபட தொடர்ந்து வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதோடு சுயஜாதக அடிப்படையில் யோகம் தரும் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
குரு இருக்கும் இடத்தின் பலன்!
நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் இப்பொழுது எட்டாம் இடத்திற்கு வருகின்றார். அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிக விரயங்களைச் சந்திக்க நேரிடும். மருத்துவச் செலவுகளும், மனக்கவலைகளும் உருவாகும். சிக்கனத்தைக் கையாண்டு, செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் தக்க பலன் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.
எட்டினில் குருவும் வந்தால்
இடமாற்றம் வந்து சேரும்!
பெட்டியில் தொகை வைத்தாலும்
பிறருக்கே பயனாய் மாறும்!
திட்டங்கள் மாறிப்போகும்!
திருப்பங்கள் பலவும் சேரும்!
வெற்றியைக் காண வேண்டின்
விரதத்தைக் கடைப்பிடிப்பீரே!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
அந்த அடிப்படையில் தொழில் வியாபாரத்தில் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வரும் இடமாற்றம், உள்ளத்தை நெருட வைக்கும். மதிப்பையும், மரியாதையையும், தக்க வைத்துக் கொள்ள இயலாது.
வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை!
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகின்றார். எனவே இரண்டாம் இடத்தில் குரு பார்வை பதிவதால் தன ஸ்தானம் புனிதமடைகின்றது. தனவரவு தாராளமாக வந்து சேரும். அதே சமயம் விரய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் வீண்விரயம் ஆகாமல் சுபவிரயமாக மாற வழி ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் வரலாம். வெளிநாடு அல்லது வெளிமாநிலத்தில் இருந்து அழைப்புகள் வரலாம்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் வீடுகட்டும் வாய்ப்பும், இடம், பூமி வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்றுவிட்டு ஒருசிலர் புதிய சொத்துக்களை வாங்குவர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனத்தை வாங்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் ெவளிநாடு சென்று பணிபுரிய நினைத்தவர்கள் அது கைகூடி மகிழ்ச்சி தரும்.
12-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் விரயங்கள் அதிகரிக்கலாம். அது சுப விரயங்களாகவே இருக்கலாம். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் வரும் மாற்றங் களை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ெவளிநாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் சிலருக்கு வரலாம். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
அசுவதி நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் கேதுவின் சாரத்தில் அசுவதி நட்சத்திரக் காலில் சஞ்சரிக்கின்றார். இக்காலத்தில் நீங்கள் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனதைக் கவ்வும். திடீர் விரயங்கள் மனதை சஞ்சலப்படுத்த வைக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறையின் காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். ஆரோக்கியப் பாதிப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு சகப் பணியாளர்களைப் போய்ச் சேரும்.
பரணி நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் பரணி நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணவரவு திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுக்ரன் உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் அரசல் புரசல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். திரும்பிச் சென்ற வரன்கள் கூட மீண்டும் வரலாம்.
கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் ஏற்படலாம். வரும் மாற்றங்கள் நன்மையைத் தருவதாக இருக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரியப் பேச்சுக்கள் முடிவடைவதற்கான அறிகுறிகள் தென்படும். சீமந்தம், காதுகுத்து, நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா, திருமணம் போன்றவற்றை நடத்த வாய்ப்புகள் கைகூடிவரும். ஆரோக்கிய சீர்கேடுகள் அகல ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
ராகு-கேது பெயர்ச்சி!
மேஷ ராசியில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் (8.10.2023) அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கின்றனர். உங்கள் ராசியில் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கும் இந்த நேரம் நாக தோஷத்தின் பின்னணியில் இருக்கிறீர்கள். எனவே உடல்நலத் தொல்லையும், உற்சாகக் குறைவும் ஏற்படும். உறவினர்களும், நண்பர்களும் உங்களை விட்டு விலகலாம். தடுமாற்றங்கள் அதிகரிக்கும். இந்த நேரத்தில் எதையும் நீங்கள் திட்டவட்டமாகச் செய்ய இயலாது. நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் தானாக வந்து சேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். இதுவரை குருவுடன் ராகு சேர்ந்திருந்தது. இப்பொழுது ராகு விலகுவதால் குரு பகவான் பலம் பெறுகின்றார். இக்காலத்தில் ராகு கேதுக்குரிய நாகசாந்திப் பரிகாரங்களை செய்வது நன்மை தரும்.
குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)
இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக் காலில் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் உங்களுக்கு இனிய பலன்கள் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது யோகத்தைச் செய்யும் என்பது பொதுவிதி. கல்யாணத் தடைகள் அகலும். கட்டிடம் கட்டும் பணியில் இருந்த தொய்வு நீங்கும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் மாற்றினத்தவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாகி வேண்டிய சலுகைகளைப் பெறுவீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு முன்னேற்றப் பாதையில் சில முட்டுக்கட்டைகள் வந்து சேரும். வரன்கள் தள்ளிப் போகலாம். கடின முயற்சிக்குப் பின்னரே சில காரியங்கள் கைகூடலாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். பணநெருக்கடிகள் ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். பிள்ளைகளின் சுபகாரியங்கள் நிறைவேறப் பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும். நீண்டதூரப் பயணங்கள் மனக்கிலேசத்தை அதிகரிக்கச் செய்யும். திட்டமிட்டுச் செலவு செய்வதன் மூலமே திருப்தியான வாழ்வை அமைத்துக் கொள்ள இயலும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இல்லத்துப் பூஜையறையில் வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து வழிபடுவது நல்லது. பஞ்சமி திதியன்று வராஹி அம்மனுக்குரிய கவசம் பாடி வழிபாடு செய்தால் நெஞ்சம் மகிழும் வாழ்க்கை அமையும்.