விருச்சகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்


விருச்சகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 15 May 2022 5:57 PM IST (Updated: 15 May 2022 6:02 PM IST)
t-max-icont-min-icon

ஐந்தில் வந்தது குருபகவான்; அனைத்திலும் இனிமேல் யோகம்தான்

புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், இப்பொழுது 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு, தன் சொந்த வீட்டிலேயே பலம்பெற்றுச் சஞ்சரிப்பதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கப் போகிறது. தொழில் வளர்ச்சியும், லாபமும் அதிகரிக்கும். பஞ்சம ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியையும் குரு பார்க்கிறார். இதனால் அனைத்து யோகங்களும் கிடைத்து மகிழ்ச்சிக் கடலில் திளைக்கப் போகிறீர்கள்.

குரு இருக்கும் இடத்தின் பலன்

நவக்கிரங்களில் சுபகிரகமாக விளங்கும் குருபகவான், உங்கள் ராசியைப் பொறுத்தவரை தனாதிபதியாகவும், பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், தனது சொந்த வீட்டில் இருந்து பார்க்கும்பொழுது நினைக்க இயலாத அளவிற்கு ராஜயோகத்தை வழங்குவார். 'ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும்' என்பார்கள். அந்த அடிப்படையில் குரு பகவான் 5 அல்லது 9-ம் இடத்தில் சஞ்சரித்தால் அற்புதமான பலன்களை அள்ளி வழங்குவார். அந்த அமைப்பு இப்பொழுது உங்கள் ராசிக்கு வருகின்றது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். வருமானமும், வாழ்க்கைத் தரமும் உயர வழிபிறக்கும்.

குருவின் பார்வை பலன்கள்

இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் 1, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். ஜென்ம ராசியைக் குரு பார்ப்பதால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வெற்றி காண்பீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். துணிந்து எடுக்கும் முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய பாதை புலப்படும். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்வதில் சகோதரர்களுக்குள் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பாகப்பிரிவினையும் நல்ல முறையில் பங்கீடாகும்.

11-ம் இடத்தை குரு பார்ப்பதால், லாப ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டி லும் கூடுதல் லாபம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் தொழிலை விரிவு செய்யும் அளவிற்கு மூலதனம் வந்துசேரும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள் சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், பூரட்டாதி நட்சத்திரக் காலில் தன்னுடைய சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது ராஜயோக அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். மறக்க முடியாத சம்பவங்கள் பல நடைபெறும். அதிகாரப் பதவி உங்களைத் தேடிவரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்பும், அதற்கேற்ற சம்பள உயர்வும் தருவர்.

சனி சாரத்தில் குரு சஞ்சாரம் (1.5.2022 முதல் 24.2.2023 வரை)

உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். உத்திரட்டாதி நட்சத்திரக் காலில், சகாய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனியின் சாரத்தில் குரு சஞ்சாரம் செய்யும் பொழுது, வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். அண்ணன், தம்பிகளின் அரவணைப்பும், ஆத்மார்த்தமான உதவிகளும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.

புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)

உங்கள் ராசிக்கு அஷ்டம-லாபாதிபதியானவர், புதன். ரேவதி நட்சத்திரக் காலில் புதன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, நன்மை-தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். என்றாலும் திடீர் விரயங்கள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதற்கு மாற்றினத்து நண்பர்கள் உறுதுணைபுரிவர்.

குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)

இக்காலத்தில் குருபகவான் சனியின் சாரத்தில் சஞ்சரித்து வக்ரம்பெறுகிறார். தன-பஞ்சமாதிபதி வக்ரம் பெறுவதால், குடும்பச்சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். கொடுக்கல் -வாங்கல்களில் கவனம் தேவை. துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் பங்குதாரர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். பிள்ளைகளாலும் பிரச்சினைகள் ஏற்படும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தக் குருப்பெயர்ச்சியில், நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பிள்ளைகளின் கல்யாண நிகழ்ச்சி, சீமந்தம், புத்திரப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகமும். உண்டு.

வளம் தரும் வழிபாடு

இந்தக் குருப்பெயர்ச்சியால் இனிய பலன்கள் கிடைக்க இல்லத்து பூஜையறையில் நந்தி படம் வைத்தும், பிரதோஷ காலத்தில் சிவன்-பார்வதி, நந்தியை வழிபடுவதும் நல்லது. இதனால் எல்லையில்லாத நற்பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.


Next Story