விருச்சகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
22-04-2023 முதல் 01-05-2024 வரை
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)
ஆறில் வந்தது குருபகவான்! அவரது பார்வை வளம்சேர்க்கும்!
வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 22.4.2023 முதல் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். வருமானம் உயரும். உத்தியோகத்தில் உயர்நிலை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். 6-ல் குரு வருகின்ற பொழுது அதன் பார்வை பலத்தால் மிகச்சிறந்த பலன்களை அடையப் போகின்றீர்கள். தன-பஞ்சமாதிபதியாக விளங்கும் குரு தாராளமாகச் செலவு செய்யவும், ஏராளமான பொருள் மற்றும் இடம், பூமி வாங்கவும் வழிவகுத்துக் கொடுப்பார்.
குரு இருக்கும் இடத்தின் பலன்!
நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு தன-பஞ்சமாதி பதியாகவும், பூர்வ, புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிரிகளின் தொல்லை குறையும். எனவே இதுவரை இருந்த இடையூறு சக்திகள் எல்லாம் அகன்று ஓடும். இனிய பலன்கள் உங்களைத் தேடி வரும். கடன் சுமை குறையும். காரிய வெற்றிக்கு நண்பர் களின்ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
தேவகுரு ஆறில்வந்தால்
தேவைகள் பூர்த்தியாகும்!
ஆவல்கள் தீர வேண்டின்
அனுசரிப்புத் தேவையாகும்!
கோபத்தை விலக்கினால் தான்
குடும்பத்தில் அமைதி கூடும்!
தீபத்தில் குருவைக் கண்டு
தரிசித்தால் நன்மை சேரும்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.
அந்த அடிப்படையில் 6-ம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்களுடைய அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகும். முன்கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. பிறரைச் சார்ந்து இருப்பவர்கள் தனித்து இயங்கும் வல்லமை பெறும் நேரமிது.
வெற்றியைக் கொடுக்கும் வியாழனின் பார்வை!
இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகின்றார். எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து நல்ல பலன்களை அள்ளி வழங்கப் போகிறது. வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இரண்டாமிடத்தைக் குரு பார்ப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதார நிலை உயரும். தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.
10-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முத்தான தொழில்கள் வாய்க்கும். புதிய கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகங்களும் ஒருசிலருக்கு வந்து சேரும். புகழ்மிக்கவர்கள், உங்களுக்குப் பின்னணியாக இருந்து பிற காரியங்களை முடித்துக் கொடுப்பர். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சுபவிரயங்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூரத்தில் பணிபுரியும் உறவினர்கள் உங்கள் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்ற விழாக்களும், பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளும், கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பும், குருவின் பார்வையால் வந்து சேரும். மாற்று மருத்துவம் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ள வழிகாட்டும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்!
அசுவதி நட்சத்திரக்காலில் குருபகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் அசுவதி நட்சத்திரக்காலில் கேது சாரத்தில் சஞ்சரிக்கின்றார். அந்த நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் பிறரிடம் ஒப்படைக்கக் கூடாது. உங்கள் மேற்பார்வையிலேயே அனைத்துச் செயல்பாடுகளையும் வைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் பரணி நட்சத்திரக்காலில் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே கல்யாணக் கனவுகள் நனவாகும். பெற்றோர்களின் மணிவிழா, கட்டிடத்திறப்பு விழா, கடைதிறப்பு விழாக்கள் நடைபெற வழிபிறக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நேரமிது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கும்.
கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது:
குரு பகவான் கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். நாட்டுப்பற்று மிக்கவர்களால் உங்கள் கூட்டு முயற்சி வெற்றி பெறும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள் வரலாம். தனவரவு தாராளமாக வந்து சேரும். தொழில் ஸ்தானாதிபதியான சூரியன் சாரத்தில் குரு பகவான் உலா வருவதால் இக்காலத்தில் கிளைத்தொழில் தொடங்கும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். இக்காலம் ஒரு பொற்காலமாகும்.
ராகு-கேது பெயர்ச்சி!
மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் 8.10.2023 அன்று மீன ராசிக்கு ராகுவும், கன்னி ராசிக்கு கேதுவும் செல்கிறார்கள். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேதுவும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் தொட்டது துலங்கும். தொழில் வளம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். ஆலயத்திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு புதிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள். புகழ், கீர்த்தி அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். வெளிநாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். இதுவரை ராகு, குருவுடன் சேர்ந்திருந்தது. இப்பொழுது ராகு விலகிவிட்டதால் குரு பகவான் பலம் பெறுகின்றார். எனவே ராகு-கேதுக்களுக்குரிய நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்வது நன்மை தரும்.
குருவின் வக்ர காலம்! (12.9.2023 முதல் 20.12.2023 வரை)
இக்காலத்தில் குரு பகவான் அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்காலில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். எனவே அவரது வக்ர காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு குறையும். கூட்டாளிகளின் மீது நம்பிக்கை ஏற்படாது. ஆடம்பரப் பொருட்களை வாங்க அதிகம் செலவிடுவீர்கள். ஒருசில காரியங்கள் நடைபெறுவதில் குழப்பங்கள் ஏற்படலாம். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் அவ்வப்போது கைகொடுக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். வியாழன் விரதமும், குரு வழிபாடும் இக்காலத்தில் வெற்றியை வழங்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தேவைக்கேற்ற பணம் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும் சூழ்நிலை உண்டு. கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு தொடரும். அவர்களின் சுபகாரியங்கள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்தில் பாராட்டுக்களும், திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இல்லத்துப் பூஜையறையில் சூரிய பகவான் படம் வைத்து விளக்கேற்றி வழிபடுவது நல்லது. ஞாயிறு தோறும் விரதமிருந்து சூரிய கவசம் பாடி வழிபட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.