தனுசு - பிலவ ஆண்டு பலன்


தனுசு - பிலவ ஆண்டு பலன்
தினத்தந்தி 23 May 2022 9:34 PM IST (Updated: 23 May 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

14.4.2022 முதல் 13.4.2023 வரை

(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்

வாய்ப்புகள் வாசல் தேடி வரும்

தனுசு ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் குரு பகவான், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானாதிபதி சனி, குடும்ப ஸ்தானத்திலேயே உலா வருகிறார். எனவே குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கூடுதல் வசதி வாய்ப்புகள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். போட்டியாக செயல்பட்டவர்கள் விலகுவர்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டு தொடங்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு, சொந்த வீட்டில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. குடும்பச் சனி குடும்ப ஸ்தானத்திலேயே பலம்பெற்று சஞ்சரிக்கிறார். குருவிற்கு சந்திரன் 6-ம் இடத்திலிருந்து சகட யோகத்தை உருவாக்குகிறார். சந்திர மங்கள யோகம், சுக்ர மங்கள யோகம், புத ஆதித்ய யோகம் போன்ற யோகங்களும் ஆண்டின் தொடக்கத்திலேயே ஏற்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கைப் பாதை சீராகவும், நேராகவும் இருக்கும்.

2-ல் சனி இருப்பதால் குடும்பச்சுமை கூடும். இருப்பினும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பிள்ளைகளுக்கான கடமையைச் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். மாற்றினத்து நண்பர்களின் உதவி உங்களுக்கு மகத்தானதாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சுபகாரியங்கள் இல்லத்தில் படிப்படியாக நடைபெறும். சனியின் இரண்டாவது சுற்று நடப்பவர்கள் மிகுந்த நற்பலன்களைப் பெறுவர்.

வெற்றிகள் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். எனவே பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பட்ட மேற்படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அசையாச் சொத்துக்களை விற்பதன் மூலம், அதிக விரயம் ஏற்படும்.

பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு ஆகிய கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன. புத்திர ஸ்தானம் சிறப்பாக இருந்தாலும் அதில் ராகு இருப்பதால், பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை நெறிப்படுத்துவது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உங்களுக்குரிய பங்கை வைத்துக்கொள்ளலாமா?, உடன்பிறப்புகளிடம் கொடுத்து விட்டு புதிய சொத்து வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். லாப ஸ்தானத்தில் கேது இருப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், அதை சமாளித்து விடுவீர்கள்.

நான்காமிடத்தில் குரு இருப்பதால் வாகன யோகம் மற்றும் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தாயின் உடல்நலம் சீராகும். புனித தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வரும். சேமிப்புத் தொகையைக் கொண்டு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும்.

குருவின் பார்வை பலன்

ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. சொந்த வீட்டில் சஞ்சரித்துப் பார்க்கும் குருவின் பார்வை அபரிமிதமானதாக இருக்கும். எனவே இழப்புகளை ஈடுசெய்யப் புதிய வாய்ப்புகள் கைகூடிவரும். வராத பாக்கிகள் வசூலாகும். திட்டமிட்டபடியே இடமாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு, வங்கிகளின் ஒத் துழைப்போடு, வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தனவரவு அதிகரிக்கப் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வீர்கள். வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். குலதெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்

25.5.2022 முதல் 9.10.2022 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். சனியின் வக்ர காலத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். வாங்கல் கொடுக்கல்களில் கவனம் தேவை. உடன்பிறப்புகள் பகையாகலாம். வழக்குகள் புதிதாகத் தோன்றும். 29.3.2023-ல் கும்ப ராசிக்கு சனி செல்கின்றார். இந்தப் பெயர்ச்சிக்குப் பிறகு சகாய ஸ்தானம் புனிதமடைவதால் இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும். பணிபுரியும் இடத்தில் பாராட்டும், புகழும் கூடும். வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

சனிக்கிழமை தோறும் வெற்றிலை மாலை அணிவித்து அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு, அனுமன் கவசமும் படித்தால் ஆனந்த வாழ்க்கை அமையும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான அதிநவீனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்டநாளாக இருந்துவந்த எண்ணங்கள் நிறைவேறும். நிச்சயித்தபடியே சுப காரியங்கள் இல்லத்தில் நடந்தேறும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகள் வழியல் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கூடுதல் சம்பளத்துடன் வேறு வேலை அமையலாம்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

17.5.2022 முதல் 25.6.2022 வரை மீனத்தில் உள்ள செவ்வாயை, மகரத்தில் உள்ள சனி பார்க்கிறார். 9.10.2022 முதல் 28.11.2022 வரை மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம விரயாதிபதி செவ்வாய். தன சகாய ஸ்தானாதிபதி சனி. எனவே விரயங்கள் அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் கோபத்தால் உள்ளம் வாடும். தொழில் கூட்டாளிகளால் தொல்லை ஏற்படும். இக்காலத்தில் அங்காரகனுக்கும், சனிக்கும் பரிகாரம் செய்வது நல்லது.


Next Story