மீனம் - தமிழ் மாத ஜோதிடம்


மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

எதிர்கால சிந்தனையிலேயே எப்பொழுதும் மூழ்கியிருக்கும் மீன ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். எனவே உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஊர்மாற்றம், இடமாற்றம், வீடுமாற்றம் போன்றவை எதிர்பார்த்தபடியே அமையும். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். விரயச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை இப்பொழுது வாங்கி மகிழ்வீர்கள். ஏழரைச் சனி தொடங்கிவிட்டது. சனி பகவானை வழிபடுவதன் மூலம் சகல பாக்கியங்களையும் வரவழைத்துக் கொள்ள இயலும்.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருக்கு சொந்த வீடு என்பதால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். இருப்பினும் பொருளாதாரத்தில் நெருக்கடிகளை கொடுக்கலாம். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது. அடிக்கடி உடல்நிலைத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். வாகனப் பயணங்களின் போது கவனம் தேவை. வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வழிபாட்டிலும் கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிகவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மேஷ ராசிக்கு குரு பகவான் செல்கிறார். குரு பகவான் தன ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாகும். குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து அதற்குரிய ஆதிபத்யங்கள் சிறப்பாக நடைபெறப்போகின்றது. குறிப்பாக கடன்சுமை குறையும். 'ரணசிகிச்சை செய்தே குணமாக்க முடியும்' என்று சொன்ன மருத்துவர்கள், இப்போது 'சாதாரண சிகிச்சையே போதும்' என்று சொல்வர். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு தனித்து தொழில் செய்ய நினைப்பீர்கள்.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு சுக்ரன் வருவது யோகம்தான். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். பெண் பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டுச் சீர்வரிசைப் பொருட்களை வாங்குவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள்.

இம்மாதம் பெருமாள் - லட்சுமி வழிபாடு பெருமைகளை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஏப்ரல்: 15, 20, 21, 25, 26, மே: 6, 7,8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.


Next Story