மீனம் - தமிழ் மாத ஜோதிடம்


மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 13 Feb 2023 10:38 AM IST (Updated: 13 Feb 2023 10:40 AM IST)
t-max-icont-min-icon

மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை

செய்வதை திருந்தச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் மீன ராசி நேயர்களே!

மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசியிலேயே பலம் பெற்றுச் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சீராகும். பொருளாதாரப் பிரச்சினை அகலும். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தடைகள் ஏற்படும். இருப்பினும் குரு பலத்தால் அவற்றை சமாளிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் குரு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கின்றார். எனவே யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுவதால் வருமானம் திருப்தி தரும். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தொல்லை தரும் எதிரிகள் விலகிச் செல்வர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டு வணிகத்தில் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். 2-ல் வரும் ராகு திரண்ட செல்வம் தரும் என்பார்கள். எனவே பொருளாதாரம் உயரும். அதே நேரம் 8-ல் கேது இருப்பதால் ஆன்மிகச் செலவு அதிகரிக்கும்.

உச்ச சுக்ரன் சஞ்சாரம்

மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக் கிரகமாக விளங்கும் சுக்ரன், உச்சம் பெறும் போது எதிரிகளின் பலம் கூடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தடைகளும், தாமதங்களும் வந்துசேரும். இனம்புரியாத கவலை மேலோங்கும். உறவினர்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பணி ஓய்விற்குப் பிறகு வரவேண்டிய தொகை வராமல் நிலுவையில் நிற்கலாம்.

கும்ப - புதன் சஞ்சாரம்

மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான புதன், 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது நற்பலன்களை வழங்கும். பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மீன - புதன் சஞ்சாரம்

மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறுவது யோகம்தான். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் சுக்ரன். அவர் 2-ம் இடத்தில் சஞ்சரித்து, 8-ம் இடத்தைப் பார்ப்பதால், இழப்புகளை ஈடுசெய்ய நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கிடைக்கும். உத்தியோக முயற்சி கைகூடும்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து லாப ஸ்தானத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்களில் தாமதம் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் திருப்தி தராது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையலாம். இக்காலத்தில் சனி மற்றும் செவ்வாய்க்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- பிப்ரவரி: 13, 14, 19, 20, 25, 26, மார்ச்: 2, 3, 12, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ராசிநாதன் குரு பலம் பெற்றிருப்பதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பணநெருக்கடி அகலும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் வேலை அல்லது படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினை குறையும். இடமாற்றம் இனிமை தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு உடல்நலத்தில் கவனம் தேவை.


Next Story