மீனம் - தமிழ் மாத ஜோதிடம்


மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை

சூழ்நிலைக்குத் தக்கவாறு குணத்தை மாற்றிக்கொள்ளும் மீன ராசி நேயர்களே!

தைமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, உங்கள் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சனி, சுக்ரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். இருப்பினும் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் வளர்ச்சிக்கு மத்தியில் தளர்ச்சி ஏற்படத்தான் செய்யும். வரவும், செலவும் சமமாகும்.

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் குரு வீற்றிருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். கேதுவோடு சந்திரன் இருப்பதால் மன அமைதிக் குறைவு ஏற்படும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழில், உத்தியோகத்தில் இழப்புகளும், எதிர்பாராத மாற்றங்களும் உருவாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. சர்ப்பக்கிரக வழிபாடுகளை முறையாக மேற்கொள்வது நல்லது.

லாப ஸ்தானத்தில் சூரியன், சனி, சுக்ர சேர்க்கை இருக்கிறது. 10-ம் இடத்தில் புதன், 3-ம் இடத்தில் செவ்வாய் உள்ளது. எனவே உடன்பிறப்புகளின் வழியே ஒருசில உதவிகள் கிடைக்கலாம். இருப்பினும் பூர்வீக சொத்துப் பஞ்சாயத்துக்களில் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். மாமன், மைத்துனர் வழியில் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரம் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

சூரியன் - சனி சேர்க்கை

உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. 6-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். இவை இரண்டும் ஒன்று கூடுவது யோகம்தான். எதிர்பார்த்த மாற்றங்கள் வந்துசேரும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல பலன்கள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத உயர்வும், நல்ல பொறுப்புகளும் கிடைக்கும். கட்டிடம் கட்டும் யோகம் உண்டு. பணி ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். சூரியன், சனியோடு சுக்ரனும் இணைந்திருப்பதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். ஆபரணங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படலாம். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.

கும்ப - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். மறைவிடத்திற்கு அதிபதியான சுக்ரன், மறைவிடமான 12-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து வழிகளிலும் நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வந்துசேரும். உதிரி வருமானங்கள் வந்து உள்ளத்தை மகிழ்விக்கும்.

மகர - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். லாப ஸ்தானத்திற்கு வரும் புதனால், யோகமான பலன் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். தடுமாற்றங்கள் தானாக விலகும். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வீடுகட்ட, வாகனம் வாங்க, பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கைகூடும்.

இம்மாதம் நவக்கிரக வழிபாடு நன்மைகளை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 17, 18, 22, 23, 28, 29, பிப்ரவரி: 3, 4.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.


Next Story