மீனம் - தமிழ் மாத ஜோதிடம்
ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை
சுறுசுறுப்பாகச் செயல்பட்டு சொல்லை செயலாக்கிக் காட்டும் மீன ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
சிம்ம - சூரியன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், மாதம் முழுவதும் 6-ம் இடத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். மனக்கவலை ஏற்படும். ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்படுவீர்கள். ஒருகடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்துகொள்ளுங்கள்.
கன்னி - புதன் சஞ்சாரம்
ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 7-க்கு அதிபதி உச்சம் பெறுவது யோகம்தான். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
வக்ர புதன் சஞ்சாரம்
ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் புதன் என்பதால், இந்த காலகட்டத்தில் நற்பலன்கள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்தித்தவர்களுக்கு, நல்ல தகவல் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வீடு மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம்.
சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்
ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 6-ம் இடத்திற்கு வருவது யோகமான நேரம்தான். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும். இழப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாக வாய்ப்புண்டு.
குரு வக்ரமும், சனி வக்ரமும்
மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரத்தில் இருக்கிறார்கள். உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் வக்ர காலம் நன்மையைத் தரும், என்றாலும் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.
இந்த மாதம் வியாழக்கிழமை தோறும் அல்லது சுவாதி நட்சத்திரம் அன்று நரசிம்மரை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 17, 18, 23, 24, செப்டம்பர்: 2, 3, 4, 8, 9, 14, 15 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் உங்கள் ராசிநாதன் வக்ரம் பெற்றிருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திருப்பங்கள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல்களில் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை வந்துபோகும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே குடும்பம் அமைதி காணும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.