மீனம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை
உழைப்பின் மூலமே உயர்வு காண இயலும் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றிருக்கின்றார். உங்கள் ராசியிலேயே ராகுவும் சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். எனவே கால சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ராசி அமைந்துள்ளது. எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை உருவாகும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கரங்களில் புரளும். தொழில் மாற்றங்களும், இடமாற்றங்களும் கூட உருவாகலாம். யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தக்க பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி 6-ந் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு சனி பகவான் லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியாவார். அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறும் பொழுது லாபம் சிறப்பாக வந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். யாரையும் நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்க இயலாது. பயணங்கள் அலைச்சல் தருவதாக இருக்குமே தவிர ஆதாயம் தருவதாக இருக்காது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இடம் வாங்குவது, வீடு வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கூடிக்கொண்டே சென்ற கடன் சுமை குறைய வழிபிறக்கும். தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவதாகச் சொல்லி அச்சுறுத்துவர்.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் பண நெருக்கடி கொஞ்சம் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் பணத்தை வைத்துக்கொண்டு செய்ய இயலாது. காரியத்தை தொடங்கி விட்டால் பணப்புழக்கம் வந்து சேரும். உறவினர்களால் சில உபத்திரவங்கள் ஏற்படலாம். குடும்ப ஒற்றுமை கொஞ்சம் குறையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். தொழிலில் திடீர் மாற்றங்கள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் பிரச்சினைகள் வரலாம்.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகை கிரகமாவார். அவர் நீச்சம் பெறுவது நன்மை தான். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் அகலும். ெவளிநாட்டில் பணிபுரிய ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைஞர்களுக்குப் பெருமை சேரும். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் அக்கரை கூடும். பெண்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 18, 19, 23, 24, 29, 30, நவம்பர் 3, 4, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்