மீனம் - ஆடி தமிழ் மாத ஜோதிடம்


மீனம் -  ஆடி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை

மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மீன ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதனான குரு, தன ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றாலும், வக்ர இயக்கத்தில் சனி இருக்கிறார். எனவே வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வரலாம். வரும் மாற்றங்கள் ஏற்றம் தருவதாகவே அமையும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள்.

மேஷ - குரு சஞ்சாரம்

நவக்கிரகத்தில் சுபகிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே உத்தியோகத்தில் உயர்பதவிகள் வரலாம். உற்ற துணையாக இருக்கும் நண்பர்கள் சுயதொழில் செய்யும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கலாம். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடன்சுமை குறைய எடுத்த புது முயற்சி வெற்றிபெறும். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் அகலும். இடமாற்றம் இனிமை தரும். நீண்ட நாட்களாக உடலோடு ஒட்டி உறவாடி இருந்த நோய் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

குருவின் பார்வை 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால், கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய பங்குதாரர்களோடு ஏற்பட்ட பிரச்சினை அகலும். ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பி, அங்கேயே தொழில் செய்ய முன்வருவீர்கள். தனவரவு திருப்தி தரும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் தானாக நடைபெறும்.

சிம்ம - புதன்

ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடத்திற்கு வரும்பொழுது நன்மை செய்யும் என்பார்கள். அந்த அடிப்படையில் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

உறவினர் பகை அகலும். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் நட்பால் தகராறுகள் தானாக விலகும்.

வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றமும், ஆசிரியர்களின் ஆதரவும் உண்டு. பெண்களுக்கு பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 27, 28, 29, ஆகஸ்டு: 2, 3, 8, 9.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.


Next Story