துலாம் - ஆண்டு பலன் - 2023


துலாம் - ஆண்டு பலன் - 2023
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

மே மாதத்திற்கு மேல் மிகச் சிறந்த பலன் உண்டு

துலாம் ராசி நேயர்களே!

புத்தாண்டு பிறக்கப் போகிறது. இதுவரை அா்த்தாஷ்டமச் சனியின் பிடியில் சிக்கியிருந்த உங்களுக்கு இப்பொழுது நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. கடந்த இரண்டரை வருட காலமாக உடலாலும், உள்ளத்தாலும் வேதனைப்பட்டு வந்த உங்களுக்கு, இனி வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு வரப்போகிறது. சனிப்பெயர்ச்சி மட்டுமல்லாமல் குருப்பெயர்ச்சியும், ராகு-கேது பெயர்ச்சியும் நல்ல பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. எனவே எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கியத் தொல்லைகள் அகன்று அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.

புத்தாண்டு கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானத்தில் லாபாதிபதி சூரியனும், விரயாதிபதி புதனும் இருக்கிறார்கள். இதனால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. 4-ல் உள்ள சனியோடு ராசிநாதன் சுக்ரன் சஞ்சரிக்கிறார். 6-ம் இடத்தில் குரு பலம் பெற்று விளங்குகிறார். அஷ்டமத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது.

ஆண்டு தொடக்கத்தில் குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால், குடும்ப ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே பணவரவு, குடும்ப முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, உத்தியோக முயற்சியில் வெற்றி போன்றவை ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு வாங்குவது அல்லது வீடு கட்டும் யோகம் ஏற்படலாம். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவச் செலவு மனக்கவலையைத் தரலாம். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வுடன் அமையும்.

கும்ப - சனி சஞ்சாரம்

29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் அவர், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் சஞ்சரித்து, நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியை வரவழைத்துக் கொடுப்பார். அர்த்தாஷ்டமச் சனி விலகியதால் இனி அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடைபெறும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, அந்த ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப் போவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பாக்கியங்களையும் கொடுப்பார். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். பொருளாதார நிலை உயரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். சனி விலகும் நேரத்தில் அதற்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளை செய்தால், வரப்போகும் நாட்கள் எல்லாம் வசந்தமாக மாறும்.

மேஷ - குரு சஞ்சாரம்

22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே நல்ல பலன்கள் வரப்போகிறது. சனி விலகிவிட்டது, குரு பார்க்கப் போகிறது. ராகு-கேதுக்களும் பெயர்ச்சியாகப் போகின்றன. எனவே இனி படிப்படி யாக முன்னேற்றம் வரப்போகிறது. ஜென்மத்தை குரு பார்ப்பதால், அடிப்படை வசதி பெருகும். மதிப்பும், மரியாதையும் உயரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். உடல்நலமும், அதற் கேற்ப ஒத்துழைக்கும்.

குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை கள் சுமுகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், உங்கள் சிக்கல்கள் அகல வழிகாட்டுவர். சிரமங்கள் குறையும். தற்போதைய ஊதியத்தை விட அதிக ஊதியத்துடன், வெளிநாட்டு வேலைக்கான அழைப்பு வரலாம். துணிவும், தன்னம் பிக்கையும் உயரும். செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் உங்கள் திறமை பளிச்சிடும்.

11-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் லாப ஸ்தானம் வலுவடையும். எனவே பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். கூட்டு முயற்சியிலிருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். தொழில் செய்பவர்கள், கிளைத் தொழில் தொடங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளிடம் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த கேது, 12-ம் இடத்திற்குச் செல்கிறார். 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு, 6-ம் இடத்திற்குச் செல்கிறார். இதன் விளைவாக தொழில் முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படும். குறிப்பாக சுமார் ஒன்றரை ஆண்டு காலம் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயரதிகாரிகளிடம் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

12-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. சுபவிரயங்களைச் செய்ய முன் வருவீர்கள். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாதவர்களும், வெளிநாடு செல்ல முடியாமல் தவித்தவர்களும், இப்போது அதற்கான வாய்ப்பைப் பெறுவர். ஆரோக்கிய குறைபாடு ஒவ்வொன்றாக அகலும். கடன்சுமை படிப்படியாகக் குறையும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

இந்தப் புத்தாண்டில் 4 முறை செவ்வாய் - சனி பார்வை ஏற்படுகிறது. இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இக்காலத்தில் வழிபாடுகள் மூலம் தடைகளை அகற்றிக் கொள்ள இயலும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து லட்சுமியை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் பட்டமங்கலம் சென்று திசைமாறிய தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலம்

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகர ராசியிலும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். சனியின் வக்ர காலத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வீண்பழிகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கொடுக்கல்- வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். மனப்பயம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்ய இயலாது.

12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகைக் கிரகம் என்பதால் இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலமாக அமையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அர்த்தாஷ்டமச் சனி விலகிய பிறகு அனைத்து நன்மைகளும் படிப்படியாக வந்துசேரும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த உத்தியோகம் கிடைத்து உதிரி வருமானங்கள் கிடைக்கும். ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், சர்ப்ப தோஷப் பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தடைகள் அகலும். தானாகவே சில வாய்ப்புகள் வந்து சேரும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வும், சம்பள உயர்வும் உறுதியாகி மகிழ்ச்சி தரும்.


Next Story