துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை
நீதி, நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத் தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக் கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அடிக்கடி வரலாம். மருத்துவச் செலவுகள் தவிர்க்க முடியாததாக அமையும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.
ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், இன்பமும், துன்பமும் மாறி மாறி வரலாம். இன்பத்தை மட்டுமே எதிர்கொள்ள நினைப்ப வர்கள், அதற்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. 'ஆறில் குரு ஊரில் பகை' என்பார்கள். எனவே மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறுவது ஒரு அற்புதமான நேரமாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிப் பாதை கண்முன் தெரியும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அன்பு நண்பர்களின் ஆதரவோடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். ஆதாயம் தரும் தகவல் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும்.
மீன - புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கிணங்க எதிர்பாராத விதத்தில் நற்பலன்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியப் பேச்சு கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். வாகன யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒரு சிலருக்கு இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு உருவாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பகையான நண்பர்கள் மீண்டும் இணைவார்கள்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அங்கிருந்து மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போவதால், இந்த காலகட்டத்தில் மிகமிக கவனத்தோடு இருப்பது நல்லது. உடல்நலத்தில் பிரச்சினைகள் வரலாம். உறவினர் பகை உருவாகும். கடன் சுமை அதிகரிக்கும். வீண் விரயங்களும், வீடு மாற்றமும், உத்தியோக மாற்றமும் திடீரென வந்துசேரலாம். கட்டிடம் கட்டும் முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-பிப்ரவரி: 13, 14, 15, 19, 20, மார்ச்: 2, 3, 6, 7, 12, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதாலும், செவ்வாய், சனி பார்வை ஏற்படுவதாலும் மனக்குழப்பம் அதிகரிக்கும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்குப் பல வழிகளிலும் பிரச்சினைகள் ஏற்படும்.