சிம்மம் - ஆண்டு பலன் - 2022


சிம்மம் - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 23 May 2022 8:44 PM IST (Updated: 23 May 2022 8:45 PM IST)
t-max-icont-min-icon

(மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

மங்கல ஓசை மனையில் கேட்கும்

சிம்ம ராசி நேயர்களே!

உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் ஆண்டாக, இந்தப் புத்தாண்டு அமையப் போகிறது. வருடத் தொடக்கத்தில் குருவின் சப்தம பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய முதலீடுகள் செய்து தொழிலை விருத்தி செய்து கொள்வீர்கள். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். கிரகங்கள் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது யோக பலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானத்தில் ராகு பலம் பெற்றிருக்கிறார். சுக ஸ்தானத்தில் சந்திரனும், செவ்வாயும் இணைந்து 'சந்திர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார்கள். 6-ம் இடத்தில் புதனும் சுக்ரனும் இணைந்திருப்பதால், 'புத சுக்ர யோகம்' உருவாகிறது. எனவே தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கடன் சுமை குறையும். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

குருவின் பார்வை பலத்தால் குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். கடுமையாக முயற்சித்தும் சென்ற ஆண்டில் முடிவடையாத சில காரியங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவடையும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு களும், பதவிகளும் கிடைக்கும். கட்டிடப் பணியில் இருந்த தொய்வு அகலும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

கும்ப குருவின் சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில், குரு பகவான் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். தொழிலைக் கண்ணும், கருத்துமாகச் செய்து, எண்ணியபடியே லாபத்தைப் பெறுவீர்கள். புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கலாம். என்றைக்கோ வாங்கிப் போட்ட நிலம், இப்பொழுது பன்மடங்கு விலை உயர்ந்து மகிழ்ச்சி தரும். பொதுவாழ்வில் இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். புனிதப் பயணம் செல்வீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சி

21.3.2022 அன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இதன் விளைவாக 9-ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கப்போகிறார். 3-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பார். '9-ல் ராகு வந்தால் பொன், பொருள் குவியும்' என்பர். எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அதில் ஏற்றம் கிடைக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கைப் பாதையில் சந்தித்தவர்களெல்லாம் சந்தோஷத்தைக் கொடுப்பர். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். கேது பலத்தால் சகோதர ஒற்றுமை கொஞ்சம் குறையலாம். வழக்குகளின் முடிவில் தாமதம் ஏற்படலாம். உடன்பிறப்புகளின் திருமணத்திலும் தடை ஏற்படும்.

குருப்பெயர்ச்சி

13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான குரு, அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அதே நேரம் உங்கள் ராசியை பொறுத்தவரை குரு பஞ்சமாதிபதியாக விளங்குவதாலும், தன்னுடைய சொந்த வீட்டில் சஞ்சரிப்பதாலும் சில நல்ல சம்பவங்களும் நடைபெறும். குறிப்பாக சுபவிரயங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத திருமணப் பேச்சுவார்த்தை இப்போது கை கூடும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகலாம். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும்.

சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி சனி என்பதால், இக்காலத்தில் மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். வாழ்க்கைத் துணை வழியே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படலாம். பணியாளர்களாலும் தொல்லை வந்துசேரும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சினைகள் வந்து விலகும்.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 8-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மை தான். அதே நேரத்தில் அவர் பஞ்சமாதிபதியாகவும் விளங்குவதால் பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினைகள் அதிகரிக்கும். உறவுகளுக்குள் உரசல் வராமல் இருக்க அமைதி காத்திடுங்கள்.

வளர்ச்சி தரும் வழிபாடு

ஞாயிறு தோறும் சிவன், உமையவள், நந்தியம்பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். கணவன் - மனைவி உறவில் ஒற்றுமை பலப்படும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைக்கும். கிரகங்களின் வக்ர இயக்க காலத்தில் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகிறது. இக்காலத்தில் நீங்கள் அதிகளவு கவனத்துடன் செயல்பட வேண்டும். 'கடன் சுமை கூடிக்கொண்டே போகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். திட்டமிட்ட காரியங் களெல்லாம் திசைமாறிச் செல்லக்கூடும். மருத்துவச் செலவுகள் அதிகரித்து மனதை வாட்டலாம். 'இடமாற்றம், வாகன மாற்றம் போன்றவற்றை செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள்.


Next Story