சிம்மம் - ஆண்டு பலன் - 2023


சிம்மம் - ஆண்டு பலன் - 2023
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் சுபகாரியம்

சிம்ம ராசி நேயர்களே!

பிறக்கும் புத்தாண்டு உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆண்டாக அமையப்போகிறது. வருடத் தொடக்கத்தில் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், மார்ச் மாதம் பெயர்ச்சியாகி கண்டகச் சனியாக மாறுகிறார். இந்த ஆண்டு பெயர்ச்சியாகும் குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவதால், கடந்த ஆண்டு ஏற்பட்ட துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு தடைகளை அகற்றிக் கொள்வீர்கள். சுய ஜாதகத்தில் உள்ள குரு, சனி, ராகு-கேதுக்களின் பலமறிந்து, அவற்றின் பெயர்ச்சிக் காலங்களில் சிறப்பு பரிகாரங்களை செய்தால் வருடம் முழுவதும் வசந்தமாக இருக்கும்.

புத்தாண்டு கிரக நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், தனாதிபதி புதனோடு இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமத்தில் குருவும், 6-ல் சனியும், சுக்ரனும் இருக்கிறார்கள். 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனோடு ராகு வீற்றிருக்கிறார். சகாய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.

புத்தாண்டு தொடங்கும் பொழுது குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. அஷ்டமத்தில் குரு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. என்றாலும், குருவின் பார்வைக்கு பலன் கிடைக்கும் அல்லவா? எனவே அந்த மூன்று ஸ்தானங்களும் பலம் பெற்று அதற்குரிய ஆதிபத்ய பலன்களை சிறப்பாக வழங்கும். அந்த அடிப்படையில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பூமி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிட்டாலும், விற்று வரும் தொகையைக் கொண்டு பழைய கடன்களை அடைக்க முற்படுவீர்கள். விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்வது நல்லது. வீடு மாற்றங் களும், உத்தியோக மாற்றங்களும் திருப்தி தரும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.

கும்ப - சனி சஞ்சாரம்

29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். 24.8.2023 அன்று மகரத்திற்கு வக்ர இயக்கத்தில் வரும் சனி பகவான், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் வக்ர இயக்கத்தில் அவர் சஞ்சரிக்கும் பொழுது, மாற்றங் களும், மகத்தான பலன்களும் கிடைக்கும். கண்டகச் சனி என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

தன் சொந்த வீட்டில் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி, பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். மேலும் சனிப் பெயர்ச்சியான ஒரு மாதத்தில், குருப்பெயர்ச்சி நிகழ்ந்து, குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தடைகள் தானாக விலகும். இடையிடையே வரும் அச்சுறுத்தல்கள் அகல ஆன்மிகப் பெரியவர்களின் அறிவுரை கை கொடுக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சீர்கேடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேஷ - குரு சஞ்சாரம்

22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிப் போகிறார். அவரது பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிகிறது. இதுவரை இருந்த துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. ஜென்ம ராசியைக் குரு பார்ப்பதால், தடைகள் விலகும். தகுந்த பலன் கிடைக்கும். நடக்கும் காரியங்கள் துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பொருளாதார அபிவிருத்தி உண்டு.

குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். அண்ணன், தம்பிக்குள் இருந்த மனக்கசப்பு மாறும். உடன்பிறப்புகளின் திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.

பஞ்சம ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நடை பெறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். வெளிநாடு சென்று பணிபுரிய நினைத்தவர்களுக்கு அது கைகூடும். தொழில் வெற்றிநடை போடும். திருமணம் போன்ற நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

ராகு-கேது பெயர்ச்சி

8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ராகு பகவான் சஞ்சரிப்பது 8-ம் இடம் என்பதால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் வரலாம்.

2-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால், சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் போகலாம். குடும்பச்சுமை கூடும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். மங்கல ஓசை மனையில் கேட்கக்கூடிய சூழ்நிலை உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஒரு தொகை செலவழிந்த பின்னர், தானாக அடுத்த தொகை வந்துசேரும். சர்ப்ப தோஷ நிவர்த்திக்குரிய பரிகாரங்களை, யோகபலம் பெற்ற நாளில் செய்து வந்தால் ஏற்ற இறக்கம் இல்லாத வாழ்க்கை அமையும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

இப்புத்தாண்டில் 4 முறை செவ்வாய்- சனி பார்வை ஏற்படுகிறது. அவற்றின் பார்வைக் காலத்தில் மனநிம்மதி வெகுவாகக் குறையும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. தொழில் மந்தநிலையில் இருக்கும். ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்தும், கைநழுவிச் செல்லலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். இதுபோன்ற காலங்களில் அனுபவஸ்தர்களின் அறிவுரையும், அருளாளர்களின் வழிகாட்டுதலுமே ஓரளவேனும் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொடுக்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்றநாளில் சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் உள்ள மார்த்தாண்ட பைரவரை வணங்கினால், எதிர்காலம் இனிமையாக அமையும்.

சனி மற்றும் குரு வக்ர காலம்

27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகர ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவரது வக்ர காலத்தில் மனநிம்மதி குறையும். குடும்பச்சுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். வந்த வரன்கள் வாசலோடு திரும்பிச் செல்லும். சிந்தனையை செயல்படுத்த இயலாமல் தவிப்பீர்கள்.

12.9.2023 முதல் 19.12.2023 வரை, மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியாக விளங்குபவர் குருபகவான். எனவே அவரது வக்ர காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடக்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. பிள்ளைகளின் காதுகுத்து விழா, கல்யாணம், பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், வீட்டுப் பராமரிப்பு வேலை போன்றவற்றில் கவனம் செலுத்த உகந்த நேரம் இது.

பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் சனி, கண்டகச் சனியாக வந்தாலும் குரு பார்வை உங்களுக்கு கைகொடுக்கும். எனவே குருப்பெயர்ச்சிக்குப் பிறகு தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி உறவு திருப்தி தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், சம்பள உயர்வும் கிடைத்து மகிழ்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.


Next Story