சிம்மம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள் - சோப கிருத ஆண்டு
14.4.2023 முதல் 13.4.2024 வரை
(மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)
வழிபாட்டால் வளர்ச்சி கூடும்!
வரலாற்றில் இடம்பெறும் விதத்தில் வாழ்க்கை நடத்த விரும்பும் சிம்ம ராசி நேயர்களே!
தன்னம்பிக்கையும், துணிவும் இருந்தால் இந்தத் தரணியை வெல்லலாம் என்று சொல்லும் உங்களுக்கு சோபகிருதுப் புத்தாண்டு கண்டகச் சனியின் ஆதிக்கத்தோடு தொடங்குகின்றது. எனவே கொஞ்சம் கவனத்தோடுதான் செயல்பட வேண்டும். உங்களைப் பொறுத்தவரை 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். சனியின் பார்வையால் சஞ்சலங்களும், தன விரயங்களும் அதிகரிக்கும். கவனத்தோடு செயல்பட்டால் தான் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மனஅமைதிக்கும் வழிபிறக்கும்.
சோபகிருது தொடங்கும் பொழுதே அஷ்டமத்தில் குரு பலம் பெறுகின்றார். 7-ம் இடத்தில் சனி பகவான் பலம் பெறுகின்றார். ஏப்ரல் 22-ந் தேதியன்று வியாழன் மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகி வந்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். எனவே குருப்பெயர்ச்சி வரை எதையும் நீங்கள் திட்டமிட்டுச் செய்ய இயலாது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை வந்து சேரும்.
இடையில் மூன்று முறை சனி-செவ்வாய் பார்வை ஏற்படுகின்றது. இக்காலத்தில் பிள்ளைகளால் தொல்லைகள் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் இழுபறி நிலையில் இருக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். 8.10.2023 முதல் மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த கிரகப் பெயர்ச்சியின் அடிப்படையில் தான் உங்களுக்குப் பலன்கள் வந்து சேரும்.
உங்கள் சுய ஜாதகத்தில் வலிமை வாய்ந்த திசாபுத்தி நடைபெறுமேயானால் உங்களுடைய எண்ணங்கள் ஓரளவேனும் நிறைவேறும். திசாபுத்தி பலமிழந்து இருந்தால் காரியத் தடைகளும், கண்ணீர் சிந்தும் செயல்களும் வரலாம். அதுபோன்ற காலங்களில் பாக்கியாதிபதியின் பலம் அறிந்து அதற்குரிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.
குருப்பெயர்ச்சி!
சித்திரை 9-ந் தேதி (22.4.2023) மேஷத்திற்கு குரு பகவான் வருகின்றார். அப்பொழுது அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்றார், உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உடல்நலம் சீராகும்.
சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினையும், சொந்தங்களால் ஏற்பட்ட தகராறும் அகலும். வியாழ நோக்கம் செயல்படுவதால் விவாகப் பேச்சுக்கள் வெற்றிகரமாக முடியும். வீடு கட்டும் யோகம் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் முயற்சி கைகூடும். முன்னோர் வழிச் சொத்துக்கள் கைக்கு கிடைத்தாலும் அதை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடந்த ஓராண்டாகவே பண நெருக்கடியில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது பணப்புழக்கம் சரளமாக அமையப்போகின்றது.
குரு பார்வை பலனாக சகோதர ஸ்தானம் வலுப்பெறுவதால் உடன்பிறப்புகளின் திருமணம் சீரும், சிறப்புமாக நடைபெறும். வழக்குகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்
கண்டகச் சனி!
மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான், இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உலா வந்து கொண்டிருந்தார். ஆகையால் உத்தியோகப் பிரச்சினை, ஊதியப் பிரச்சினை, உடன் இருப்பவர்களால் பிரச்சினை என்று நிம்மதியில்லாத வாழ்க்கை அமைந்திருந்தது. சனி பகவான் ஆண்டு தொடக்கத்தில் இன்னல்களை அதிகரிக்கச் செய்யும் கண்டகச் சனியாக சஞ்சரிக்கிறார். எனவே அதன் கடுமையிலிருந்து விடுபட தெய்வ தரிசனங்கள் உங்களுக்குத் தேவை. கல்யாண முயற்சி கைகூடுவதில் தடைகள் ஏற்படும். உங்களுடைய முன்னேற்றத்தைப் பற்றி முன்னதாகவே யாரிடமேனும் நீங்கள் தெரிவித்தால் அதில் முட்டுக்கட்டைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். பிள்ளைகள் தாங்களாகவே முடிவெடுத்து மனதிற்கு பிடிக்காத சில காரியங்களைச் செய்யலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.
கும்பத்தில் சஞ்சரிக்கும் சனி இடையில் வக்ரமும் பெறுகின்றார். பின்னர் 24.8.2023 முதல் மகரத்திற்கு வந்து, அங்கும் வக்ரம் பெறுகின்றார். அங்கிருந்து மீண்டும் 20.12.2023-ல் கும்ப ராசிக்கு முறையாகப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். இந்த வக்ர இயக்க காலம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும் என்றாலும், களத்திர ஸ்தானாதிபதியாக சனி விளங்குவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். சூடுபிடித்த வியாபாரம் தொய்வு நிலைக்கு வந்து விடும். பாடுபட்டுச் சேர்த்த பணத்தைப் பல வழிகளில் செலவிடப் போகிறீர்கள். உடல்நலத்திலும் உபத்திரவம் ஏற்பட்டு கவலைகள் வந்துசேரும். தடபுடலாய் செய்ய நினைத்த காரியம் தடுமாற்றத்தில் முடியும்.
ராகு-கேது பெயர்ச்சி!
8.10.2023 அன்று மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இக்காலத்தில் எதைச் செய்தாலும் இறைவழிபாட்டை மேற்கொண்டு அதன்பிறகு காரியத்தை தொடங்கினால் தான் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும். 'சம்பளம் போதுமானதாக இல்லையே' என்று சிலரும், 'பிள்ளைகளின் குணம் சரியில்லாமல் போகின்றதே' என்று ஒருசிலரும், 'ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுகிறதே' என்று சிலரும் கவலைப்படுவர். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் எப்படியாவது கடைசி நேரத்தில் கைகூடிவரும். அஷ்டமத்து ராகு அலைச்சலுக்கேற்ற ஆதாயத்தைக் கொடுக்காது. எனவே யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களில் செய்துகொள்வது நல்லது.
கேது 3-ல் சஞ்சரிப்பதால் சகோதர சச்சரவுகள் அதிகரிக்கும். ஒற்றுமையாக இருந்த உடன்பிறப்புகள் இப்பொழுது விலகலாம். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக அமையுமா என்பது சந்தேகம் தான். இழப்புகளும், விரயங்களும் ஏராளமாக வந்து சேரும். தைரியம், தன்னம்பிக்கையை தக்க வைத்துக்கொள்வது அரிது. 'கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். தங்கள் கீழ் பணிபுரிபவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
வளர்ச்சி தரும் வழிபாடு!
புத்தாண்டில் அத்தனை காரியங்களும் வெற்றி பெற தேய்பிறை அஷ்டமியன்று துதிப்பாடல்களைப் பாடி பைரவரை வழிபடுவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் உள்ள மார்த்தாண்ட பைரவரை வழிபட்டு மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கான பலன்கள்!
இந்தப் புத்தாண்டில் வரவும், செலவும் சமமாகும் சூழ்நிலை உண்டு. வாய்ப்புகள் வாசல் தேடிவந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. ஆரோக்கியச் சீர்கேடுகளும், ரண சிகிச்சையும் ஏற்படலாம். குடும்ப விபரங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். அதே போல உங்கள் முன்னேற்றத்தையும் பிறரிடம் சொல்வதன் மூலம் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறலாம். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும். வரவும், செலவும் சமமாகும்.
குரு-சனியின் வக்ரம்!
12.9.2023 முதல் 20.12.2023 வரை மேஷத்தில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே பலத்த போட்டிகளுக்கு இடையில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். அனைத்து வழிகளிலும் இடையூறுகள் ஏற்படுவதோடு, பண விரயங்களையும் அதிகரிக்கச் செய்யும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். 'இடமாற்றம் செய்யலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும்.
27.6.2023 முதல் 23.8.2023 வரை கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகின்றார். பிறகு 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்தில் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. நம்பிச் செய்த காரியங்கள் பாதியிலேயே நிற்கும். நாணயப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆதரவு காட்டுபவர்களின் எண்ணிக்கை குறையலாம். உத்தியோகத்தில் இனிமை தராத இடமாற்றம் வந்து சேரும். தொழிலில் சிலரது குறுக்கீடுகளால் நல்ல வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும். எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நேரமிது.