மேஷம் - ஆண்டு பலன் - 2022


மேஷம் - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 23 May 2022 8:37 PM IST (Updated: 23 May 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

(அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை)(பெயரின் முதல் எழுத்துக்கள் : -சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

தொழில் முன்னேற்றம் ஏற்படும்


மேஷ ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு வளர்ச்சியைத் தரப்போகிறது. எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் ஆண்டின் தொடக்கத்தில் குருவும், சனியும் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய், சந்திரனோடு இணைந்து 'சந்திர மங்கள யோக'த்தையும், தனாதிபதி சுக்ரன் புதனோடு சேர்ந்து 'புத சுக்ர யோக'த்தையும் உருவாக்குகிறார்கள். தொழில் ஸ்தானாதிபதி சனி, தொழில் ஸ்தானத்திலேயே பலம் பெற்று இருக்கிறார். எனவே இந்த ஆண்டு இனிய பலன்கள் ஏராளமாக கிடைக்கப்போகிறது.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், அஷ்டமத்தில் கேதுவோடும், சந்திரனோடும் இணைந்திருக்கிறார். இதனால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ திருமண வாய்ப்பு கைகூடலாம். இல்லம் கட்டிக் குடியேறுவதில் இருந்த தடை அகலும். இரண்டில் ராகு இருப்பதால் பாக்கிகள் வசூலாகும். கொள்கைப்பிடிப்போடு செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தில் புதனும், சுக்ரனும் இணைந்திருப்பதால், காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை மட்டும் அவ்வப்போது தலைதூக்கும். உடனடியாக மருத்துவரை அணுகிவிட்டால், பெரிய பாதிப்புகள் வராது.

கும்ப குருவின் சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து, 3, 5, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தகராறு செய்த உடன்பிறப்புகள் இனித் தானாக வந்திணைவர். துணிந்து எடுத்த முடிவுகளால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்போகிறீர்கள். கொடுக்கல் - வாங்கல் திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் நீங்கள் எடுத்த புது முயற்சி வெற்றியாகும். சரிந்த பொருளாதாரம், சகஜ நிலைக்கு திரும்பும்.

ராகு-கேது பெயர்ச்சி

இந்த ஆண்டு 21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், உங்கள் ராசிக்கே வருகிறார். ஜென்ம ராகுவால் சில நல்ல மாற்றங்கள் வரலாம். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் இருக்கத்தான் செய்யும். தோல், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எனில் ஆரம்பத்திலேயே கவனித்து விடுங்கள்.

அதே நேரம் இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது, இப்பொழுது சப்தம ஸ்தானத்திற்கு வருகிறார். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. உங்களுக்கு நீங்களே எதிரியாகும் சூழல் உருவாகும். தைரியம் குறையும். மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்பு களையும் ஒப்படைக்க இயலாது.

குருப்பெயர்ச்சி

13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவின் சொந்த வீடாகும். மீனத்தில் இருக்கும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகிறது.

குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால், சுக ஸ்தானம் புனிதமடைகின்றது. இதனால் சகல சவுகரியங்களும் வந்து சேரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடல்நலம் சீராகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். 'கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றதே' என்ற கவலை நீங்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடலாம். பிள்ளைகளின் மேற்படிப்புக்காக செய்த முயற்சி வெற்றி தரும்.

குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால், உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அது கை கூடும். உடல்நலம் சீராகும். 'எந்த முன்னேற்றமும் இதுவரை வரவில்லையே' என்ற கவலை விலகும். ஊதிய உயர்வு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. மேலும் வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால், பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இழந்த பதவிகள் கிடைக்கலாம். தீவிர முயற்சி செய்தும் இதுவரை முடியாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும். பூர்வீக சொத்து கைக்கு கிடைக்க வாய்ப்புண்டு.

சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி, வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும், மூன்றாம் நபர்களின் குறுக்கீடு அதிகரிக்கும். சூடுபிடித்த வியாபாரம் மந்தமாகலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். மிகுந்த கவனம் தேவைப்படும் காலம் இது. அவர் வக்ரம் பெறும்பொழுது தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படலாம். சொத்துத் தகராறு அதிகரிக்கும். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடக்கமாட்டார்கள்.

வளர்ச்சி தரும் வழிபாடு

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால், சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

பெண்களுக்கான பலன்கள்

இப்புத்தாண்டில் உங்களுக்கு வாங்கல்-கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். வருமானம் உயரும். நல்ல செய்திகள் அதிகம் வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் சுபகாரியங்கள் முடிவாகும். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் பகை அகலும். உடன்பிறப்புகளும், தாயும் உதவிகரமாக இருப்பர். பணிபுரியும் பெண்களுக்கு பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும் உண்டு.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை ஏற்படுகின்றது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகின்றது. இதுபோன்ற காலங்களில் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். மனக்குழப்பம் உச்சமடையும். குடும்ப பிரச்சினை கொடிகட்டிப் பறக்கும். எல்லாவற்றிலும் குறுக்கீடு சக்திகள் அதிகரிக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். அருளாளர்களின் வழிகாட்டுதல்கள் இக்காலத்தை இனிமையாக்கும்.


Next Story