< Back
இளைஞர் மலர்
சாதனை கடலில் நீந்தும், இளம் நட்சத்திரம்..!
இளைஞர் மலர்

சாதனை கடலில் நீந்தும், இளம் நட்சத்திரம்..!

தினத்தந்தி
|
12 Aug 2023 7:55 AM IST

இங்கிலீஷ் கால்வாய்' கால்வாயை இருவழிப்பாதையில் நீந்தி கடந்து சாதனை படைத்து இருக்கிறார், இளம் நீச்சல் வீரர் சினேகன்.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே உள்ள கடலின் ஒரு பகுதி ஆங்கில கால்வாய். அது 'இங்கிலீஷ் கால்வாய்' என்றும் அழைக்கப்படுகிறது. அந்த கால்வாயை இருவழிப்பாதையில் நீந்தி கடந்து சாதனை படைத்து இருக்கிறார், இளம் நீச்சல் வீரர் சினேகன். இவர் தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரை இருவழிப்பாதையில் நீந்திக் கடந்த சாதனைக்கும் சொந்தக்காரர். அவருடன் சிறு நேர்காணல்...

* உங்களைப் பற்றி கூறுங்கள்?

எனது சொந்த ஊர் தேனி. பெற்றோர் நீதிராஜன்-அனுஷா. தங்கை பெயர் நிகாஷினி. நான் தேனி அருகே முத்துதேவன்பட்டி சாந்தி நிகேதன் பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன்.

* நீச்சல் மீது ஆர்வம் எப்படி வந்தது?

6 வயதிலிருந்தே நீச்சல் பயில்கிறேன். தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருக்கும், நீச்சல் குளத்தில் தான் பயிற்சியை தொடங்கினேன். நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, பெற்றோர் என்னை பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், முதலில் நீந்த கற்றுக்கொடுத்தார். பிறகு, நீச்சல் போட்டிகள் மற்றும் நீச்சல் சாதனை பற்றிய விழிப்புணர்வை ஊட்டினார். அதற்கு பிறகுதான், நீச்சல் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டேன்.

* நீச்சல் குளங்களை தாண்டி, பயிற்சி களங்களில் நீந்தியது எப்போது?

10 வயதில் முதன் முதலில் கடலில் நீந்தினேன். சீறிப்பாய்ந்து வரும் அலைகளுக்கு இடையே நீச்சல் அடிப்பதற்கு முதலில் பயமாக இருந்தது. கடலில் நீந்துவது குறித்தும் பயிற்சியாளர் விஜயகுமார் பயிற்சி அளித்தார். சில நாட்களில் கடல் மீதான பயம் விலகி விட்டது. இப்போது, கடலை பார்த்தாலே அந்த அலைகளோடு நீந்தி விளையாட ஆசைப்படுகிறேன். கடலிலும், கால்வாயிலும் நிறைய சாதனைகளையும் படைத்திருக்கிறேன்.

* சமீபத்தில் ஆங்கில கால்வாயில் நீந்தி சாதனை படைத்தீர்கள். அந்த அனுபவத்தை சொல்லுங்கள்?

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வடகிழக்கு அயர்லாந்து மற்றும் தென் மேற்கு ஸ்காட்லாந்து இடையே இருக்கும் வடக்கு கால்வாயில் நீந்தினேன். அதை நீந்தி கடந்த பின்னர், ஆங்கில கால்வாயை இருவழிப்பாதையில் நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

இங்கிலாந்து, பிரான்ஸ் இடையே கடலின் ஒரு அங்கமாக உள்ளது தான் ஆங்கில கால்வாய். இங்கிலாந்தில் இருந்து 36 கிலோமீட்டர் நீந்தி பிரான்ஸ் எல்லையை அடைய வேண்டும். மீண்டும் 36 கிலோமீட்டர் நீந்தி இங்கிலாந்து திரும்பி வர வேண்டும். மொத்தம் 72 கிலோமீட்டர் நீந்த வேண்டும் என்பதால் அதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தேன்.

இந்திய வீரர்கள் யாரும் இருவழிப்பாதையில் நீந்தியதாக சாதனை பதிவு செய்யப்படவில்லை என்பதை அறிந்தேன். இதுவரை இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரை நீந்திச் சென்று விட்டு, படகில் திரும்பி வந்து விடுவார்கள். எனவே, ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து, திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு நீந்தி வந்து சாதனை படைப்பதற்கான ஏற்பாடுகளை 'சானல் ஸ்விம்மிங் பெடரேஷன் ஆப் பைலட்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது. இதற்காக 'இந்தியன் இன்டிபென்டட் மாரத்தான்' அமைப்பு சார்பில் 6 வீரர்கள் கொண்ட இந்திய அணி பயிற்சியாளர் விஜயகுமார் தலைமையில் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றோம்.

6 பேரில் நான் மட்டுமே சிறுவன். 3 பேர் மாற்றுத்திறனாளிகள். ஆங்கில கால்வாயில் 10 நாட்கள் நீச்சல் பயிற்சி எடுத்தேன்.

ஜூலை 18-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நீந்தத் தொடங்கினோம். 19-ந்தேதி காலை 10.30 மணியளவில் வெற்றிகரமாக இலக்கை எட்டினோம். இருவழிப்பாதையில் நீந்திய முதல் இந்திய அணி என்ற சாதனையை படைத்தோம்.

* இந்த சாதனையில் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

அது கடினமான கடல்பகுதி என்பது முன்பே தெரியும். அங்கு கடல் நாய், சுறா, ஜெல்லி மீன்கள், டால்பின் போன்றவை அதிக அளவில் உள்ளன. நான் நீந்தும் போது கடல் நாய், டால்பின் அதிக அளவில் கடந்து போயின. டால்பின் ஒன்றும் செய்யாது என்பதால் எனக்கு பயம் இல்லை. கடல்நாய்கள் வரும் போது தான் கொஞ்சம் பயமாக இருந்தது. இருப்பினும் படகில் பாதுகாப்பு குழுவினர் வந்ததால் தைரியமாக நீந்தினேன். ஜெல்லி மீன்களிடம் இருந்து பாதுகாக்க உடலில் கிரீம் தடவிக் கொண்டேன். நான் இந்த சாதனைக்கு முன்பே, தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே இருவழிப்பாதையில் நீந்தி சாதனை புரிந்திருந்தேன். அந்த அனுபவம் இருந்தாலும் அது நம் நாட்டின் கடல்போல் இல்லை. கடல்நீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. நீரின் குளிர் 14 முதல் 15 டிகிரி வரை இருந்தது.

* தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே நீந்திய சாதனைப்பற்றி கூறுங்கள்?

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே கடலில் நீந்துவதற்காக 3 மாத காலமாக ஒவ்வொரு வாரமும் இரு நாட்கள் தனுஷ்கோடி சென்று பயிற்சி எடுத்தேன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த சாதனையை நிகழ்த்தினேன். தனுஷ்கோடியில் இருந்து நீந்தி தலைமன்னார் சென்று விட்டு, மீண்டும் புறப்பட்ட இடமான தனுஷ்கோடிக்கு அதுவரை யாரும் நீந்தி வந்ததே இல்லை. ஆனால் நான் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் சென்று விட்டு அங்கிருந்து திரும்பவும் தனுஷ்கோடி வந்தடைந்தேன். அந்த அனுபவம், ஆங்கில கால்வாயில் நீந்துவதற்கும் கைகொடுத்தது.

* முதல்-அமைச்சரிடம் பாராட்டு பெற்றீர்களே... உங்களிடம் அவர் என்ன சொன்னார்?

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே நீந்தி சாதனை படைத்த பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் நேரில் சந்தித்து பாராட்டு பெறும் வாய்ப்பு கிடைத்தது. என் சாதனை குறித்து கேட்டறிந்து, இன்னும் நிறைய சாதனைகள் படைத்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். கடந்த ஆண்டு டி.ஜி.பி. அலுவலகத்தில், அப்போதைய டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் என்னை வாழ்த்தி வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.

* உங்களின் அடுத்த இலக்குகள் என்ன?

ஆங்கில கால்வாய், வடக்கு கால்வாய் போன்று உலக அளவில் பிரபலமான 7 கால்வாய்களை நீந்தி கடக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதையே அடுத்த இலக்காக கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறேன். அத்துடன் கடல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைக்கவும் பயிற்சிகள் பெற்று வருகிறேன். ஏற்கனவே கடல் நீச்சலில் மாநில அளவில் தங்கமும், தேசிய அளவில் பரிசுகளும் பெற்றிருக்கிறேன்.

* படிப்பில் சினேகன் எப்படி?

தினமும் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகிறேன். மாலையில் பயிற்சி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் அன்றாட பாடங்களை படித்து முடித்து விடுவேன். செல்போன் அதிகம் பயன்படுத்த மாட்டேன். நன்றாக படிப்பேன். இந்த கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வு எழுத இருப்பதால் படிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன்.

* மாணவர்களிடம் டாக்டராக வேண்டும், என்ஜினீயராக வேண்டும் என்ற கனவுகள் இருக்கும். அந்த வகையில் எதிர்காலத்தில் நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

நீச்சலில் பல சாதனைகள் படைக்க வேண்டும். படித்து பட்டங்கள் பெற்றதும், தொழில்முனைவோராகி, நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகளை கொடுக்கும் சிறந்த தொழில் அதிபராக உயர வேண்டும் என்பது எனது விருப்பம்.

* எதிர்கால லட்சியம் என்ன?

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான் எனது லட்சியம், கனவு எல்லாமும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க என்னை நான் இன்னும் நிறைய தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருவேன்.

இன்னும் பல சாதனை சிகரங்களை எட்டிட சினேகனை வாழ்த்துவோம்.

மேலும் செய்திகள்