< Back
இளைஞர் மலர்
ஆசிரியர் பயிற்சி படிப்புகளும், தகவல்களும்..!
இளைஞர் மலர்

ஆசிரியர் பயிற்சி படிப்புகளும், தகவல்களும்..!

தினத்தந்தி
|
1 July 2023 3:38 PM IST

கடந்த வாரம் ஆசிரியர் பணியின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம். அந்தவகையில் இந்த வாரம், ஆசிரியர் பயிற்சி படிப்புகளை பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் அனுபவமிக்க கல்வியாளரான சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி பகிர்ந்து கொள்கிறார்.

* ஆசிரியர் பயிற்சி வகுப்புகளின் பட்டியல்

பி.ஏ.பி.எட் (B.A.B.Ed), பி.எஸ்சி. பி.எட். (B.Sc.B.Ed), பி.எட் (B.Ed) மற்றும் டி.இஐ.இடி (D.El.Ed) போன்ற பல்வேறு இளங்கலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வளரும் ஆசிரியர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கலாம். இதுபற்றி விளக்கமாக தெரிந்துகொள்வோம்.

* பி.ஏ. பி.எட்.

இது இளங்கலை கல்வியை உள்ளடக்கிய இரட்டை பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பாடமாகும். படிப்புகளின் காலம் பொதுவாக 5 ஆண்டுகள். 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம்.

மாணவர்கள் இந்தப் படிப்பைத் தொடர்வதன் மூலம் இளங்கலை படிப்பையும், அதோடு சேர்ந்து ஆசிரியர் பயிற்சியையும் பெற முடியும். இதனால் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம். விருப்பப்படி, விண்ணப்பதாரர்கள் பி.ஏ. படிப்புக்கு ஒரு பாடத்தை தேர்வு செய்யலாம். பாடத்திட்டம் இரண்டு படிப்புகளின் தனித்துவமான கலவையாக இருக்கும். பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு ஆசிரியராக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்!

* பி.எஸ்சி மற்றும் பி.எட் படிப்பு

இந்த பாடத்திட்டமானது மாணவர்கள் பி.எஸ்சி (B.Sc) மற்றும் பி.எட் (B.Ed) படிப்புகளை 5 வருட படிப்பாக கற்க உதவுகிறது. பிளஸ்-2 தேர்வில், அறிவியல் பாடத்திட்டத்தின் கீழ் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த படிப்புகளில் சேரலாம். இந்த படிப்பில் அறிவியல் பொதுப்படிப்புகளும், கல்வியில் தொழில்முறை படிப்புகளும் இருக்கும். பி.எஸ்சி மற்றும் பி.எட் ஒருங்கிணைந்த படிப்புகளை வழங்கும் புகழ்பெற்ற நிறுவனங்கள் நாட்டில் பல உள்ளன. சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.

* டி.எல்.எட்

தொடக்கக் கல்வியில் டிப்ளமோ படிப்பது, கற்பித்தலைப் புரிந்துகொள்ள உதவும் மற்றொரு பாடமாகும். இது ஆசிரியர் பயிற்சி சான்றளிக்கப்பட்ட டிப்ளமோ திட்டமாகும். மாணவர்கள் இரண்டு ஆண்டுகளில் கற்பித்தல் முறைகளை கற்றுக்கொள்ளலாம். வகுப்பறைப் பயிற்சி அல்லது தொலைதூரக் கற்றலின் உதவியுடன் இந்த பயிற்சியை பெற முடியும். குழந்தைகளின் வளர்ச்சி, தனித்திறமைகளை வளர்ப்பது, ஆங்கில மொழி கற்பித்தல், கணிதக் கல்வி போன்றவை இதில் கற்றுத்தரப்படும்.

* பி.பி.எட் (B.PEd.)

இது ஆசிரியர்களை திறமையான உடற்பயிற்சி பயிற்சியாளர்களாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்கல்விதான், இதன் முக்கிய பாடத்திட்டம். இந்த படிப்பு இளங்கலை உடற்கல்வி அல்லது பி.பி.இ. என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாடத்தின் காலம் 3 முதல் 4 ஆண்டுகள். ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு உடற்கல்வியியல் படிப்புகளை வழங்கும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ளன.

* பி.எட்

பி.எட். படிப்பை பெற பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட படிப்பாக, அதைத் தொடரலாம். இதில் குழந்தைப் பருவம் மற்றும் வளர்ச்சி, சம கால இந்தியா மற்றும் கல்வி, கற்றல் மற்றும் கற்பித்தல், மொழி, துறைகள் மற்றும் பாடங்களை புரிந்துகொள்வது, பாலினம், பள்ளி மற்றும் சமூகம் ஆகியவை இதில் விளக்கமாக கற்றுத்தரப்படும்.

அடுத்த வாரம்: குழந்தைகளை உற்சாகமாக வளர்த்தெடுக்கும் மாண்டிச்சேரி ஆசிரியர் பயிற்சியும், அது தொடர்பான படிப்புகளும்..!

12-ம் வகுப்புக்கு பிறகு ஆசிரியர் படிப்பில் சேர விரும்புபவர்களின் கவனத்திற்கு...

* கற்பித்தல் முறைகள் மற்றும் உத்திகள் பற்றிய ஆழமான அறிவைப் பெறுங்கள். இது உங்கள் கற்பித்தல் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும்.

* திறமையான கற்பித்தல் மற்றும் வகுப்பறை நிர்வாகத்திற்கு அவசியமான மொழி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* குழந்தை உளவியலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இது மாணவர்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் தனிப்பட்ட கற்றல் திறமைகளை வளர்ப்பதற்கும் உதவும்.

* படைப்பாற்றல் மற்றும் புதுமையான சிந்தனையை மேம்படுத்துங்கள். இது ஈர்க்கக்கூடிய மற்றும் பயனுள்ள பாடத் திட்டங்களை வடிவமைக்க உதவும்.

* சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான பிணைப்பை உருவாக்குங்கள். இதன் மூலம் உங்கள் கற்பித்தல் வாழ்க்கை முழுவதும் மதிப்புமிக்க வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்க முடியும்.

மேலும் செய்திகள்