< Back
இளைஞர் மலர்
சிரித்து பழகுங்கள்..!
இளைஞர் மலர்

சிரித்து பழகுங்கள்..!

தினத்தந்தி
|
17 Jun 2023 12:14 PM IST

நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். எத்தகைய பிரச்சினையையும் எளிதாக கையாளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக்கொள்வார்கள். துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் துவண்டு போகாமல் அதன் போக்கிலேயே சென்று அதன் வீரியத்தை குறைப்பதற்கு முயற்சிப்பார்கள். மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்தாலும் அதனை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

பொதுவாக மனதுக்கு பிடித்தமானவர்களைத்தான் நகைச்சுவை உணர்வுடன் கேலி-கிண்டல் செய்ய முடியும். இவர்களுக்கும் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருப்பதால் தம்முடைய பலவீனங்களை ரசனை உணர்வுடன் விமர்சிக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே அவர்களின் கேலி-கிண்டலை எதிர்கொள்வார்கள். அது அவர்களுக்குள் மனக்குறையாக வெளிப்படாது. தன்மீது காட்டும் பாசத்தின் வெளிப்பாடாக உரிமையுடன் கிண்டல் செய்கிறார்கள் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள்.

அதேவேளையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களாக இருந்தால் எளிதில் கோபப்பட்டுவிடுவார்கள். அவர்களுக்குள் தன்னை ஏளனம் செய்கிறார்கள் என்ற எண்ணமே மேலிடும். சின்னச் சின்ன விஷயங்களை கூட பெரிய பிரச்சினையாக மாற்றிவிடுவார்கள். மற்றவர்கள் கேலி-கிண்டல் செய்யும்போது மன வேதனை அடைய வேண்டிய அவசியமில்லை. மாறாக 'எதற்காக அப்படி கேலி செய்கிறார்கள்' என்பதை கோபப்படாமல் சுய பரிசோதனை செய்து பார்த்தாலே போதும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் குறைகளை நிவர்த்தி செய்து விடலாம்.

கேலி செய்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் சிரித்துப் பழக தொடங்கிவிட்டாலே கேலியின் வீரியம் குறைந்து போய்விடும். இருவரும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கு உருவாகிவிடும். நகைச்சுவை உணர்வு மன ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.

மேலும் செய்திகள்