< Back
இளைஞர் மலர்
வளமையான துறைகளும், சிறப்பான வேலைவாய்ப்புகளும்...!
இளைஞர் மலர்

வளமையான துறைகளும், சிறப்பான வேலைவாய்ப்புகளும்...!

தினத்தந்தி
|
4 Jun 2023 8:44 PM IST

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல்... இந்த படிப்புகளை தாண்டி, எதிர்காலத்தில் என்னென்ன படிப்புகள் எல்லாம் ஆதிக்கம் செலுத்தும் என்பதை அறிந்து கொள்வோம்.

* டிரோன் சயின்ஸ்

ஆளில்லா பறக்கும் விமானங்கள் எனப்படும் டிரோன் சார்ந்த படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இன்று திருமண வீடுகளில் மட்டும் பறக்கவிடப்படும் டிரோன்கள், பிற்காலத்தில் விவசாய நிலங்களில் விதை விதைக்கவும், பூச்சி மருந்து தெளிக்கவும் அதிக அளவில் பயன்படுத்தப்படலாம். அதேசமயம் அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்தவும், மிகச்சிறிய பொருட்களை சுமந்து சென்று டெலிவரி செய்யவும், மனித நடமாட்டம் குறைவான மலைப்பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், ராணுவம் மற்றும் காவல் துறைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இவை உதவியாக இருக்கும். இதுசம்மந்தமான படிப்பு டெல்லியில் மத்திய அரசின் மூலமாகவே வழங்கப்படுவதால், ஓரிரு ஆண்டுகளில், நிறைய 'டிரோன் பைலட்' வேலைவாய்ப்புகள் உருவாகும்.

* ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ.தொழில்நுட்பமும், ரோபோடிக்ஸ் சயின்ஸும் மருத்துவ துறையில் மிகப்பெரிய புரட்சிகளை செய்ய இருக்கின்றன. நோயாளிகளை கவனிக்க, அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள ரோபோடிக்ஸ் மற்றும் ஏ.ஐ.தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. எதிர்காலத்தில், இன்னும் அதிகமாய் பயன்படபோகிறது.

* இணைய பாதுகாப்பு

இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ராஜ்ஜியம் நடக்கும் இந்த வேளையில், ஆன்லைன் தரவுகளை பாதுகாக்கும் சைபர் செக்யூரிட்டிக்கு, இன்றளவும் பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங், யூ.பி.ஐ. பேமெண்ட்... என எல்லாமே டிஜிட்டல் மயமாகி போன நிலையில், டிஜிட்டல் உலகில் பகிரப்படும் முக்கிய தகவல்களை பத்திரமாக பாதுகாக்கும் வேலைக்கு, பிரபல இணையதள நிறுவனங்கள் அதிக சம்பளத்தில் ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.

* பேட்டரி உருவாக்கம் மற்றும் மறுசுழற்சி

பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு மாற்றாக வந்திருக்கும் பேட்டரி வாகனங்களின் இதயமாக கருதப்படும் பேட்டரி சம்பந்தமான வேலைவாய்ப்புகள் எதிர்காலத்தில் அதிகமாக உருவாகும். குறிப்பாக பேட்டரி உருவாக்கம், பழுதான பேட்டரிகளை ஆக்கப்பூர்வமான முறையில் மறுசுழற்சி செய்தல், பழுது நீக்குதல், பேட்டரி ஆராய்ச்சி... இதுபோன்ற வேலைவாய்ப்புகள் அதிகமாய் கொட்டிகிடக்கும்.

* எலக்ட்ரானிக்ஸ் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்

மொபைல் போன், லேப்டாப், சின்ன சின்ன ரோபோட்ஸ், எலக்ட்ரிக் வாட்ச், கம்ப்யூட்டர் கழிவுகள்... இப்படி எலக்ட்ரானிக் கழிவுகளை பயனுள்ள முறையில் மறுசுழற்சி செய்வது, ஈ-வேஸ்ட் கழிவுகளை உலகளவில் ஏற்றுமதி-இறக்குமதி செய்வது போன்ற வேலைவாய்ப்புகளும், எதிர்காலத்தில் மிக பிரகாசமாக இருக்கும்.

* கிளவுட் சயின்ஸ் & புரோகிராமிங்

இன்று பெரும்பாலான தரவுகள், கிளவுட் முறையில் முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே சேமிக்கப்படுகிறது. அதாவது வேலைசெய்வது, கோப்புகளை தயாரிப்பது, சேமிப்பது, மென்பொருட்களை இயக்குவது... என எல்லாமே கிளவுட் ஸ்பேஸ் முறையில் ஆன்லைனிலேயே நடக்கிறது. இப்படி ஆன்லைனில் நடக்கும் செயல்பாடுகளை கண்காணிக்க, தவறுகளை சுட்டிக்காட்ட, சரிசெய்யும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகி வருகிறது. மேலும் புதுமையான புரோகிராமிங் மொழிகளும் அறிமுகமாவதால், அதற்கும் அதிக வரவேற்பு இருக்கிறது.

* மொபைல் ஆப்ஸ் டெவலெப்மெண்ட்

மொபைல் ஆப்ஸ் தயாரித்தல், இணையதள வடிவமைப்புக்கு இணையாக பார்க்கப்படும் வேலை. இன்று எல்லா நிறுவனங்களும் தங்களுக்கான மொபைல் ஆப்களை களமிறக்கி வருகின்றன. எதிர்காலத்தில் இணையதள மாறுபாட்டிற்கு ஏற்ப, இவை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இவை மட்டுமின்றி, சோலார் பேனல் தயாரிப்பு, சோலார் பேனல் பராமரிப்பு, வாடிக்கையாளர் நட்புறவு மேலாண்மை, இயற்கை விவசாயம், பயோ இன்பர்மேஷன், விவசாயம், மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் மற்றும் டேட்டா அனலிஸ்ட்... இப்படியாக நிறைய புதுப்புது வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதனால் படிப்போடு சேர்த்து, இவை சம்பந்தமான கூடுதல் அறிவை வளர்த்து கொள்வதன் மூலம் உங்களுக்கான வேலைவாய்ப்பையும், எதிர்காலத்தையும் கட்டமைக்கலாம். நல்ல சம்பளத்தில் வேலை செய்யலாம்.

சலுகைகள்

மிகக்குறைந்த கல்வி கட்டணம், உயர்தர அறிவியல் சோதனை கூடங்கள், திறமையான பேராசிரியர்கள், கற்பனை செய்திராத கல்லூரி வாழ்க்கை இவற்றோடு, மாணவர்களுக்கு உதவி தொகையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்கள், பட்டியலின மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்களே, தேர்ச்சிக்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்