வெயிலோடு விளையாடு
|கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
கோடை காலத்தில் வெப்ப தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இளைஞர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும். அவர்கள் விளையாடும்போது வெளியேறும் வியர்வையின் அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். நாவறட்சி ஏற்படும். சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். உடல் சோர்வு, தலை வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, அம்மை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தோல் நோய்களும் தோன்றும்.
வியர்வை அதிகமாக வெளியேறும்போது தண்ணீரால் கழுவாமல் விட்டுவிட்டால் நமைச்சல் உண்டாகி அது கொப்பளங்களாக மாறிவிடக்கூடும். ஆதலால் வெயிலில் விளையாடும் குழந்தைகள் இருமுறை குளிப்பது நல்லது.
வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவு குறைய தொடங்கிவிடும். வியர்வையாக வெளியேறும் நீரை ஈடு செய்ய வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவது கூடாது. அதனுடன் உப்புச்சத்தின் அளவையும் ஈடு செய்ய வேண்டும். அதற்கு தண்ணீருடன் உப்பையும் சேர்த்து அருந்த வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்தும் குடித்து வரலாம். அது உடலில் இருந்து வெளியேறிய நீரையும், உப்புச்சத்தையும் ஈடுகட்டும்.
கோடை காலத்தில் சிறு குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்போது சோர்வு அதிகம் ஏற்படும். தாகம் எடுத்தாலும் விளையாட்டிலேயே முழு கவனமாய் இருப்பார்கள். அதனால் அவ்வப்போது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து, அவர்களுக்கு பருக கொடுக்கலாம். தண்ணீரை நன்கு காய்ச்சி கொடுப்பது நல்லது. குழந்தைகள் காற்றோட்டமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
காற்றோட்டம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதிலும் எண்ணெய்யை காய்ச்சி, ஆறவைத்து உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டி வரலாம். மஞ்சளை அரைத்து உடலில் தேய்த்து வருவதும் நோய்த்தொற்றில் இருந்து காக்கும்.