தேசிய டிஜிட்டல் நூலகம்
|இந்தியத் தேசிய டிஜிட்டல் நூலகம் என்பது அனைத்து வகையான கற்றல் வளங்களை தன்னுள் கொண்டுள்ள மெய்நிகர் களஞ்சியம். இந்த நூலகம் கரக்பூர் ஐ.ஐ.டி.யால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இணையம் குறித்த சிந்தனை விவாதிக்கப்பட்டாலும், 1960-ல்தான் அது சாத்தியமானது. 1960-களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, அர்பாநெட் என்ற பெயரில் இணையத்தை கண்டுபிடித்தபோது, இணையம் நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் உள்பட யாரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். 1991-ல் டிம் பெர்னர்ஸ் லீ கூட்டணி, வேர்ல்டு வைடு வெப்(WWW) கண்டுபிடித்து, இண்டர்நெட் என்கிற பெயரில் அதைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளித்தனர். அதன் பின்னர் இணையத் தொழில்நுட்பம் கண்ட அசுர வளர்ச்சி, வரலாறு. இணைய தொழில்நுட்பத்தின் வீச்சும் அதன் அபரிமித ஆற்றலும் கனவிலும் நினைக்க முடியாத திறன்களை இன்று சாத்தியப்படுத்தியுள்ளன. மாணவர்களின் பயன்பாட்டுக்காகவும் இந்திய மனிதவளத் திறன் மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய மின்னணு நூலகமும் அத்தகைய சாத்தியங்களில் ஒன்று.
இந்தியத் தேசிய டிஜிட்டல் நூலகம் என்பது அனைத்து வகையான கற்றல் வளங்களை தன்னுள் கொண்டுள்ள மெய்நிகர் களஞ்சியம். இந்த நூலகம் கரக்பூர் ஐ.ஐ.டி.யால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்த விருப்பமுள்ளவர்கள் https://ndl.iitkgp.ac.in/ என்கிற இணையதளத்துக்குள் சென்று, அதில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நூலகத்தில் உள்நுழைவதற்கு உறுப்பினர்களுக்கு தனிப் பயன்பாட்டுப் பெயரும் கடவுச்சொல்லும் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் டிஜிட்டல் நூலகத்துக்குள் சென்று தங்களுக்குத் தேவையான மின்னணுப் புத்தகங்களைப் பதிவிறக்கம்செய்து பயனடையலாம். அறிவை வளர்த்துக்கொள்ளலாம். திறனையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் இந்த நூலகம் தொகுக்கப்பட்டுள்ளது. எந்த மொழியின் உள்ளடக்கத்தையும் இதனுள் சேகரித்து வைக்க முடியும். இந்தியாவில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த நூலகம் செயல்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடுவோர், போட்டித் தேர்வுக்கு ஆயத்தமாவோர் போன்றோருக்குக் குறிப்பிட்ட சேவைகளை அவர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் தனித்தனியே வழங்கும் வசதி இந்த நூலகத்தில் உண்டு.. சுமார் 70 மொழிகளில் 3 லட்சம் நூலாசிரியர்களால் எழுதப்பட்ட சுமார் 7 லட்சம் நூல்கள், 3 லட்சம் கட்டுரைகள், அதில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், 2.4 லட்சம் ஆடியோ விரிவுரைகள், 18 ஆயிரம் வீடியோ விரிவுரைகள் ஆகியவை இந்த டிஜிட்டல் நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.