மாண்டிசோரி: எதிர்காலத்திற்கான ஆசிரியர் பயிற்சி..!
|கடந்த மூன்று வாரங்களாக ஆசிரியர் பணி குறித்தும், பல்வேறு விதமான ஆசிரியர் பயிற்சி முறைகள் பற்றியும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெறும் படிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த வாரம், வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பற்றியும், அது ஏன் ஆதிக்கம் செலுத்த இருக்கிறது என்பது குறித்தும் சென்னையை சேர்ந்த கல்வியாளர் அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.
''நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது'' என்றவர், அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்.
''இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்'' என்றவர், இன்னும் சில வருடங்களில், தமிழகத்தின் எல்லா நகரங்களிலும், பல்வேறு மாண்டிசோரி பள்ளிகள் ஆரம்பமாகிவிடும் என்கிறார்.
''இப்போதே மாண்டிசோரி ஆசிரியர் களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எதிர்காலத்தில் இது அதிகமாகிவிடும். மேலும் மற்ற ஆசிரியர் பணிகளை விட மாண்டிசோரி ஆசிரியர் பணி மிகவும் எளிமையானது, வித்தியாசமானது என்பது நிறைய மாணவ-மாணவிகள் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு முக்கிய காரணமாகிறது. ஆம்..! மாண்டிசோரி ஆசிரியர் பணியில், 'லெசன் பிளான்' இல்லை. ஏனெனில் படிப்பதற்கான வழிமுறைகளை மாணவர்கள்தான் உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களது கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து வழிநடத்தினால் மட்டும் போதும். ஒரே வகுப்பறையில் அடைத்து வைத்து கல்வி கற்றுக்கொடுக்கும் அவசியமும் இல்லை. பல்வேறு வழிமுறைகளை (டீச்சங் எயிட்) பயன்படுத்தி கல்வி கற்பிக்கலாம். இது மற்ற ஆசிரியர் பணிகளை போல கட்டாய பணியாக இல்லாமல், விரும்பி செய்யக்கூடிய பணியாகவே இருக்கும் என்பதாலும், இதற்கான வரவேற்பு அதிகரித்திருக்கிறது'' என்றவர், இந்த பயிற்சி பெற வயது வித்தியாசங்கள் எதுவுமில்லை என்பதும் மிக முக்கிய காரணம் என்கிறார்.
''கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள்... என (10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை) யார் வேண்டுமானாலும் படிக்கலாம். வீட்டில் இருந்து ஆன்லைன் முறையில் கூட படிக்கலாம். ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வியாக படிப்பதனால் அதற்கு மதிப்பு குறைந்துவிடும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் கிடையாது. முக்கியமான வகுப்புகளுக்கு மட்டும், நேரடி வகுப்பில் கலந்து கொண்டு மற்றபடியான வகுப்புகளை ஆன்லைன் முறையிலேயே மேற்கொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு காரணங்கள்தான், மாண்டிசோரி கல்வியையும், ஆசிரியர் பயிற்சியையும் எதிர்காலத்திற்கானதாக மாற்றி இருக்கிறது.
ஒருகாலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிரபலமாக இருந்தன. ஆனால் சி.பி.எஸ்.இ. கல்விமுறை வந்ததும், மெட்ரிகுலேஷனை விட சி.பி.எஸ்.இ. பிரபலமாகின. இந்த பட்டியல் இன்று இண்டர்நேஷனல் கல்விமுறை வரை சென்றுவிட்டது. அதன்படி, எதிர்காலத்தில் மாண்டிசோரி நிச்சயம் தவிர்க்க முடியாத கல்வி முறையாகவும், ஆசிரிய பயிற்சியாகவும் மாற இருக்கிறது'' என்று புதுநம்பிக்கை கொடுக்கும் அன்ன ஸ்டெபி, இறுதி கருத்தை பதிவு செய்தார்.
''ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பேசோ, கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ்... இவர்கள் எல்லாம் மாண்டிசோரி கல்வி முறையில் படித்தவர்கள். இந்த கல்விமுறை நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் யாரும் எதிர்பார்க்காததை விட, ரொம்ப பிரபலமாக இருக்க போகிறது'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.