< Back
இளைஞர் மலர்
மாண்டிசேரி கல்வி முறையும், ஆசிரியர் பயிற்சியும்...!
இளைஞர் மலர்

மாண்டிசேரி கல்வி முறையும், ஆசிரியர் பயிற்சியும்...!

தினத்தந்தி
|
9 July 2023 7:19 PM IST

கடந்த வாரம் பல்வேறு முறைகளில் ஆசிரியர் பயிற்சி பெறுவதை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த வாரம், மாண்டிசேரி எனப்படும் மழலை ஆசிரியர் பயிற்சி பற்றியும், இதன் முக்கியத்துவம் பற்றியும் சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

* மாண்டிசேரி கல்வி முறை

மரியா மாண்டிசேரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டிசேரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டிசேரி பள்ளி மற்றும் மாண்டிசேரி ஆசிரியர்களின் நோக்கம். இது சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி முறை. வெகுசுலபமாகவே, கற்றுக்கொள்ள முடியும்.

* மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி

10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் வரை மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற முடியும். 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ இன் மாண்டிசேரி பயிற்சியும், பிளஸ்-2 படித்தவர்கள், அட்வாண்ஸ்ட் மாண்டிசேரி படிப்பும் படிக்கலாம். இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற விரும்புபவர்கள் அடிப்படை மற்றும் அட்வாண்ஸ்ட் பயிற்சிகளை பெற்று, ஆசிரியர் தகுதி பெறலாம்.

* மாண்டிசேரி ஆசிரியர் பணி

நன்கு வளர்ந்த குழந்தைகளை கையாள்வதை விட, மழலைகளை கையாள்வது கொஞ்சம் கடினமானது. சவாலானது. வழக்கத்தை விட நிதானமும், பொறுமையும் அவசியம். இதோடு, தினந்தோறும் புதிது புதிதாக கற்றுக்கொண்டு குழந்தைகளை வழிநடந்த முடியும் என்று எண்ணுபவர்கள், மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெறலாம்.

* வேலைவாய்ப்பு

நகர்ப்புறங்களில் மாண்டிசேரி பள்ளிகள் அதிகமாகவே தென்படுகின்றன. 'பிளே ஸ்கூல்' போன்றவற்றிலும், மாண்டிசேரி பயிற்சி முடித்திருக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், இயல்பான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், மாண்டிசேரி பயிற்சியின் மூலம் அவர்களது திறனையும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், மாண்டிசேரி பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

* எப்படி வேறுபடுகிறது?

வழக்கமான பள்ளிகளில் ஆசிரியர் முதன்மையாக இருப்பார். அவர் சொல்வதை கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு மாண்டிசேரி கல்விமுறையில் குழந்தைகள் முதன்மையாக இருப்பர். ஆசிரியர் பின்னணியில் இருந்து அவர்களை வழிநடத்துவார். இதில் மனப்பாட முறை கிடையாது. யோசனை செய்து பதில் அளிக்க வேண்டும். நன்றாக கவனித்து (Observe) தானே கற்று கொள்வதால் ஆழ் மனதில் (subconscious) பதியும். கரும்பலகை முறை கிடையாது. பார்த்து எழுதும் முறையும் கிடையாது. எல்லாமே செயல்முறை கல்வியாகவே கற்றுக்கொடுக்கப்படும்.

ஒவ்வொரு குழுந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும். தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.

ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன.

எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

வீட்டுக்கு சென்றால் தாயுடன் நேரம் செலவழிக்க, வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி பொதுவான கல்வி முறைக்கும், மாண்டிசேரி கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதேபோல, இவை அனைத்தையும் கையாள்வதிலும் சிரமங்கள் உண்டு.

* சிறந்த பயிற்சி

இப்போது மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பல இடங்களில் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கீகாரம் பெற்ற, முன் அனுபவம் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறுவது, திறமையை வளர்த்து கொள்ளவும், சுலபமான பணிவாய்ப்பு பெறவும் வழிவகுக்கும்.

* கட்டணம்

பயிற்சி நிறுவனங்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். அதிகபட்சம், ரூ.20 ஆயிரத்திற்குள், ஒரு வருடத்திற்குள் பயிற்சியை முடித்துவிடலாம்.

மேலும் செய்திகள்